வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகேயுள்ள சேங்குன்றம் கிராமத்தில் கடந்த 9-ம் தேதி மாலை, ஞானவேல் என்ற பா.ம.க பிரமுகர் அதே பகுதியைச் சேர்ந்த ரௌடியால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த நிலையில், பா.ம.க பொருளாளர் திலகபாமா, ஞானவேலின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம்பேசிய திலகபாமா, “சட்டம் – ஒழுங்கு சீர்கெட்டிருக்கும் நிலையை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்து கள்ளத் துப்பாக்கி கலாசாரத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்பதற்கான குரலை வலுவாகக் கொடுப்பதற்காக இங்கு வந்திருக்கிறோம்.
இது முதல் முறை அல்ல. கடந்த ஆண்டு, சோளிங்கர் பகுதியில் பா.ம.க வழக்கறிஞர் சக்கரவர்த்தி என்பவரும் துப்பாக்கியால் சுடப்பட்டுத்தான் இறந்தார். அந்தச் சம்பவத்தில், குற்றவாளிகளைப் பிடிக்கச் சென்றபோதும் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவங்கள் நடந்தன. அதேபோல, இன்றைக்கு குடியாத்தத்தில் நடைபெற்ற சம்பவமும் மிக மோசமானது.

தமிழக அரசுக்கு நாங்கள் வைக்கும் கோரிக்கை என்னவென்றால், இந்தப் பகுதிகளில் காட்டு விலங்குகள் வருவதால் நிறைய விவசாயிகள் துப்பாக்கிகளை வைத்திருக்கிறார்கள். இதுபோன்ற கள்ளத் துப்பாக்கிகள் விற்பனை காவல்துறையினரின் கவனத்துக்கே போகவில்லை என்றால், நாம் என்ன மாதிரியான நாட்டில் இருக்கிறோம்?
தொடர்ச்சியாக நடைபெறும் இந்த விவகாரத்தைக் கவனத்தில் எடுத்துக்கொண்டு உடனடியாக கள்ளத் துப்பாக்கி கலாசாரத்தை நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். காவல்துறையினரின் கரத்தை வலுப்படுத்த வேண்டும். சாதாரணமாக, இங்குள்ள காளியம்மன் கோயில் பகுதியிலும் குடித்துவிட்டு உட்கார்ந்து சூதாடுகிறார்கள். பெண்கள் அங்குப் போக முடியவில்லை. இதுபற்றி, பலமுறை புகார் கொடுத்தும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை. நடவடிக்கை எடுத்திருந்தால் இந்தச் சாவு நிறுத்தப்பட்டிருக்கும்.
தமிழ்நாடு முழுவதும் மதுவை அமிர்தமாகக் கொடுக்கப்போய் மிதமிஞ்சிய போதை கிடைக்காததால், கஞ்சாவைத் தாண்டி வேறு போதைக்குப் போய்விட்டார்கள். சாராயத்தால் குறைந்த வயதில் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே போகிறது. எனவே, ஞானவேல் கொலையில் தொடர்புடைய குற்றவாளிகளை எந்தக் காரணத்தைக் கொண்டும் வெளியில் விட விடக்கூடாது.
அவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். ஏனென்றால், அவர்கள் வெளியே வந்தால் இன்னும் பலபேரின் உயிர்கள் சாதாரணமாகப் பறிக்கப்பட்டுவிடும். ஞானவேலின் குடும்பம் நிர்கதியாக நிற்கிறது. இதுமாதிரியான இழப்புகள் இனி நடைபெறாதவாறு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
`பண்டிகைக் காலங்களில் கொலை நடப்பது இயல்பு’ என்ற வார்த்தையை அமைச்சர் ராஜ்மோகன் கூச்சம் இல்லாமல் சொல்லிக்கொண்டிருக்கிறார். பண்டிகைக் காலங்களில் நாங்கள் புது துணி போடுவது இயல்பு, இனிப்பு வழங்கி மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்வது இயல்பு என்று சொன்னால் பரவாயில்லை. கொலை நடப்பது இயல்பு என்று யாராவது சொல்லலாமா? இதைச் சொல்வதற்கு ஒரு அமைச்சர் எதற்கு? அதுவும் அவர் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்.

அந்த ஆட்சி வேண்டாம் என்று தானே மக்கள் உங்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். இப்படிச் சொல்ல உங்களுக்கு வெட்கமாக இல்லையா? அமைச்சர்கள் பொறுப்புடன் பேச வேண்டும். டாஸ்மாக் கடை வேண்டாம் என்று போராடும் பொதுமக்களுக்கு காவல்துறையினர் பாதுகாப்பு கொடுப்பதில்லை. ஆனால், சாராயக் கடைக்குப் பாதுகாப்பு கொடுக்கிறார்கள். ஏனெனில், அது அரசாங்க சொத்து.
இப்படி, சாராயம் வாங்க வரிசையில் நிற்பவர்களுக்கு காவல்துறையினர் காவலுக்கு நின்றால், நாளைக்கு காவல்துறையினர்மீது அவர்களுக்கு எப்படி மதிப்பு வரும்? பயம் போய்விட்டது. மக்களுக்கான அரசாக மாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. முதலமைச்சர் விஜய் கண்டிப்புடன் செயல்பட வேண்டும். தயவுசெய்து, சட்டம் – ஒழுங்கு பாதுகாக்க நடவடிக்கை எடுங்கள். த.வெ.க அரசின் நிர்வாகத் திறமை பலவீனப்பட்டுக் கொண்டே போவதையும் முதலமைச்சர் உடனடியாகக் கவனத்தில் கொள்ள வேண்டும்’’ என்றார்.