பாலியே அமைதியாகும் ஒரு நாள்… ‘Nyepi’யை அவமதித்த சுற்றுலாப் பயணிக்கு ஓராண்டு சிறை!

Spread the love

பாலியில் ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்படும் ‘ந்யேபி’ (Nyepi) அமைதியின் நாளன்று, அதன் விதிகளை மீறி சமூக வலைதளத்தில் அவதூறு வீடியோ வெளியிட்ட ஸ்விஸ் சுற்றுலாப் பயணிக்கு டென்பசார் மாவட்ட நீதிமன்றம் ஓராண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது.

ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த 26 வயது சுற்றுலாப் பயணி லூசியன் ஆண்ட்ரின் ஸ்க்ராகென். கடந்த மார்ச் 19 அன்று பாலியில் ‘ந்யேபி’ கடைப்பிடிக்கப்பட்டபோது, அங்கு வீட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது, சத்தம் எழுப்பக் கூடாது, வணிக நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்று கடுமையான கட்டுப்பாடுகள் அமலில் இருந்தன.

தீர்ப்பு

ஆனால், உணவு வாங்க முடியாத விரக்தியில் தான் தங்கியிருந்த இடத்தை விட்டு வெளியேறிய அவர், வெறிச்சோடிய சாலையில் நடந்து சென்றதுடன், 22 விநாடிகள் கொண்ட வீடியோ ஒன்றை பதிவு செய்து தனது Instagram பக்கத்தில் வெளியிட்டதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. அதில் ந்யேபி மற்றும் அதன் விதிகளைப் பற்றி அவதூறான வார்த்தைகளால் பேசியதாகக் கூறப்படுகிறது.

இந்த வீடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து உள்ளூர் மக்கள் கொந்தளித்தனர். உடனடியாகப் களத்தில் இறங்கிய பாலி காவல்துறை, இந்தோனேசியாவின் புதிய குற்றவியல் சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த டென்பசார் மாவட்ட நீதிமன்றம், ஆகஸ்ட் 20 அன்று அவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.

‘ந்யேபி’ என்றால் என்ன?

பாலி இந்துக்களின் சாளுவாக ஆண்டுப் புத்தாண்டான ‘ந்யேபி’, ஆண்டுதோறும் 24 மணி நேரம் முழுமையாகக் கடைப்பிடிக்கப்படும் ஒரு புனித நாளாகும். இந்நாளில் வெளியே செல்லுதல், வேலை செய்தல், விளக்குகள் பயன்படுத்துதல், பொழுதுபோக்கு மற்றும் சத்தம் எழுப்புதல் ஆகியவற்றுக்குத் கடுமையான தடை விதிக்கப்படும்.

கைது

இதனால் கடைகள் மற்றும் அலுவலகங்கள் மூடப்படுவதுடன், சாலைகள் முழுவதும் வெறிச்சோடும். பாலி விமான நிலையமும் அன்றைய தினம் முழுமையாக மூடப்பட்டுவிடும். இந்தக் கட்டுப்பாடுகள் ஆன்மிக நம்பிக்கையைத் தாண்டி, அங்கு வசிக்கும் மற்றும் சுற்றுலா செல்லும் அனைத்துத் தரப்பினருக்கும் பொதுவானது மற்றும் கட்டாயமானது.

ஏன் ஓராண்டு சிறை?

ந்யேபி விதிகள் குறித்து அவர் தங்கியிருந்த வில்லா ஊழியர்கள் முன்கூட்டியே தெளிவாக அறிவுறுத்தியதாக நீதிமன்றத்தில் சாட்சியமளிக்கப்பட்டது. எச்சரிக்கையையும் மீறி வெளியே சென்று வீடியோ வெளியிட்டதுடன், அது சமூக வலைதளங்களில் மத உணர்வைப் புண்படுத்தும் வகையில் பரவியது.

கைதுக்குப் பிறகு அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட போதிலும், இந்தோனேசியாவின் புதிய குற்றவியல் சட்டத்தின் கீழ் மதத்தை அவமதிக்கும் உள்ளடக்கங்களை டிஜிட்டல் தளங்களில் பரப்பிய குற்றத்திற்காக இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அரசுத் தரப்பு 15 மாதங்கள் சிறைத் தண்டனை கோரிய நிலையில், நீதிமன்றம் ஓராண்டு சிறை வழங்கித் தீர்ப்பளித்துள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *