பாஸ்போர்ட் இல்லாத நாக்பூர் மாணவனுக்கு அபுதாபியில் தேர்வு மையம் – தொடரும் நீட் தேர்வு குளறுபடி!

Spread the love

மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு இந்த ஆண்டு மே மாத தொடக்கத்தில் நடந்தது. இதில் தேர்வுக்கு முன்பு வினாத்தாள் கசிந்ததால் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. மறுதேர்வு நாளை நடத்தப்படுகிறது. இத்தேர்வுக்கு மாணவர்கள் ஏற்கெனவே ஆன்லைன் மூலம் அட்மிட்கார்டுகளை பதிவிறக்கம் செய்து வருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரை சேர்ந்த மாணவர் ஒருவருக்கு அவர் கேட்காமலேயே அபுதாபியில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவரின் தந்தை மொகமத் தாலிப் கூறுகையில், “நேற்று அனுமதிச் சீட்டைப் பதிவிறக்கம் செய்தபோது, ​​அதில் தேர்வு மையமாக அபுதாபியில் உள்ள ஒரு பள்ளி குறிப்பிடப்பட்டிருந்ததைக் கண்டு நாங்கள் மிகவும் அதிர்ச்சியடைந்தோம்.

ஏனெனில், நாங்கள் தேர்வு செய்த விருப்ப தேர்வு மையங்களில் அது போன்ற எதையும் குறிப்பிடவில்லை” என்று தெரிவித்தார்.

ஆன்லைனில் பெறப்பட்ட அட்மிட் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது. அதில் தேர்வு மையத்தின் பெயர் “SALAMA BINT BUTTI STREET: 23 RD MUROOR ROAD; ABU DHABI, UAE: PIN – 46492-46492-46492 என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இது குறித்து பலரும் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தனர். ஒருவர் வெளியிட்டுள்ள பதிவில், “மிகவும் வருந்தத்தக்கது! ஒரு போட்டித் தேர்வு இவ்வளவு பெரிதாக்கப்படும் என்று நான் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. இச்செயல் மாணவர்கள் மீது தேவையற்ற அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. ஒரு குழந்தை கழிவறைக்குச் சென்றால் கூட அதை ஊடகங்கள் செய்தி வெளியிடும் நிலையை இது ஒத்திருக்கிறது. இத்தகைய செய்திகள் நாட்டிற்கு அவப்பெயரையே தேடித்தருகின்றன.” என்று தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொழில்நுட்பம் அல்லது செயலி (application) சார்ந்த ஏதேனும் பிழையினால் ஏற்பட்டிருக்கலாமா என்று மற்றவர்கள் சந்தேகம் எழுப்பினர். சமூக ஊடகங்களில் இது வைரலானதை தொடர்ந்து நீட் தேர்வை நடத்தும் தேசிய டெஸ்டிங் ஏஜென்சி வெளியிட்டுள்ள செய்தியில், தவறு சரி செய்யப்படும் என்றும், சம்பந்தப்பட்ட மாணவர் நாக்பூரில் உள்ள ஒரு தேர்வு மையத்தில் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார் என்று குறிப்பிட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *