பிஎம் கிஷான் திட்டத்தில் சீர்திருத்தம் செய்யவேண்டியது காலத்தின் கட்டாயம்!

Spread the love

அனைவருக்கும் பசுமை வணக்கம்!

இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகளின் நலன் கருதி, ‘பிஎம் கிஷான்’ என்ற பெயரில் உழவர்கள் வெகுமதித் திட்டத்தை மத்திய அரசு கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கியது. இந்தத் திட்டத்தின் கீழ், ஆண்டுதோறும் ஒவ்வொரு விவசாயிக்கும் 6,000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. திட்டம் தொடங்கப்பட்டு 7 ஆண்டுகள் முடிந்துவிட்ட நிலையிலும், விவசாயிகளுக்கு வழங்கப்படும் தொகையில் ஒரு ரூபாய்கூட உயர்த்தப்படவில்லை. இது விவசாயிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 7 ஆண்டுகளில் நாட்டின் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. வேளாண் இடுபொருள்களின் விலை, பண்ணைக் கருவிகளின் வாடகை மற்றும் விவசாயப் பணியாளர்களின் ஊதியம் ஆகியவையும் பல மடங்கு உயர்ந்துள்ளன. ஆனால், மத்திய அரசு இவற்றைக் கொஞ்சமும் பொருட்படுத்தாமல், தொடக்க நிலையில் அறிவிக்கப்பட்ட 6,000 ரூபாயைத்தான் இன்று வரையிலும் வழங்கி வருகிறது. ‘இது எந்தவிதத்தில் நியாயம்?’ என விவசாயிகள் கேள்வி எழுப்புகிறார்கள்.

‘இன்றைய நிலவரப்படி ஒரு நபருக்குக் குறைந்தபட்சம் 15,000 ரூபாயாவது கொடுத்தால்தான் அது அர்த்தமுள்ளதாக இருக்கும். இந்தத் தொகையை வழங்க, மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என விவசாயிகள் வலியுறுத்துகிறார்கள்.

இந்தத் திட்டத்தில் குத்தகை விவசாயிகள் புறக்கணிக்கப்படுவது மிகவும் வேதனையான விஷயம். சொந்த நிலம் வாங்குவதற்கு வசதியில்லாத விவசாயிகள்தான், குத்தகை நிலத்தில் விவசாயம் செய்கிறார்கள். பிஎம் கிஷான் திட்டத்தில் நிதியுதவி கிடைப்பதென்பது, இவர்களுக்குப் பேருதவியாக இருக்கும். குத்தகை நிலத்தில் விவசாயம் செய்பவர்களுக்கு உதவித் திட்டத்தை மறுப்பது ஜனநாயகத்துக்கு எதிரானது.

இந்தியாவில் 2 கோடியே 29 லட்சம் விவசாயிகள் குத்தகை நிலத்தில் விவசாயம் செய்கிறார்கள். தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 4 லட்சம் விவசாயிகள் குத்தகை நிலத்தில் விவசாயம் செய்கிறார்கள். நாட்டில் உள்ள அனைத்துக் குத்தகை விவசாயிகளுக்கும் பிஎம் கிஷான் திட்டத்தின்கீழ் நிதியுதவி வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுதான், விவசாயிகள் மீது உண்மையான அக்கறை கொண்ட செயல்பாடு.

நிதியை உயர்த்தி வழங்குவதும், குத்தகை நிலத்தில் விவசாயம் செய்பவர் களையும் இந்தத் திட்டத்தில் இணைப்பதும் காலத்தின் கட்டாயம். ஆட்சியாளர் களின் கடமையும் கூட!

– ஆசிரியர்

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *