இவர்களில் யஷ் என்பவர் ஏற்கெனவே மக்களுக்குப் பரிச்சயம்தான். ‘டியூட்’ படத்தின் ஹைதராபாத் பிரஸ் மீட்டில், பிரதீப் ரங்கநாதன் தமிழில் பேச, அதனைத் தெலுங்கில் ஒருவர் மொழிபெயர்த்துச் சொல்லிச் சமூக வலைதளங்களில் வைரலான அவரைப் பலருக்கும் நினைவிருக்கலாம். அவரும் இப்படத்தின் மூலம் இயக்குநராகிறார்.
அவரைத் தொடர்ந்து ‘டிராகன்’ படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய சாணக்கியன் என்பவரும் இப்படத்தை இயக்குகிறார். இவர்கள் உட்பட இன்னும் நால்வர் இப்படத்தை இயக்குகிறார்கள்.
இதற்கு முன் 2 இயக்குநர்கள் காம்போவாகச் சேர்ந்து ஒரு படத்தை இயக்குவது என்பது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என அனைத்துச் சினிமாக்களிலும் வழக்கமாக நடக்கும் ஒன்றுதான். ஆனால், இரண்டிற்கும் மேற்பட்ட இயக்குநர்கள் ஒன்றாக இணைந்து ஒரு படத்தை இயக்குவது இதுவே முதன் முறை.

தமிழில் வெளிவந்த ‘சுயம்வரம்’ படத்தை மொத்தமாக 14 இயக்குநர்கள் சேர்ந்து இயக்கியிருக்கிறார்கள்தான். ஆனால், இப்படத்தின் ஒவ்வொரு பகுதிகளை இந்த 14 இயக்குநர்கள் டைரக்ட் செய்து, ஒரே நாளில் மொத்த படத்தின் படப்பிடிப்பையும் முடித்துவிட்டார்கள்.
அதேபோல, பாலிவுட்டில் வெளிவந்த ‘எக்ஸ்: பாஸ்ட் இஸ் பிரசண்ட்’ படத்தையும் மொத்தமாக 11 இயக்குநர்கள் இயக்கியிருப்பார்கள். அப்படத்தின் கதையின் ஒவ்வொரு பகுதிகளை இந்த 11 இயக்குநர்கள் இயக்கியிருப்பார்கள். ஆனால், ஒரே படத்தை மொத்தமாக 6 பேர் இணைந்து டைரக்ட் செய்வது இதுவே முதல் முறை. அதுதான் இந்த ஆல்ஃபா யூனிட்டின் ஸ்பெஷல்!