வயநாடு நிலச்சரிவு: 5 ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை..! – Kumudam

Spread the love

வயநாடு மாவட்டம் கள்ளாடியில் உள்ள மீனாட்சி பாலம் அருகே இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மலப்புறம் மற்றும் வயநாடு மாவட்டங்களை இணைக்கும் சுரங்கப் பாதை சாலைத் திட்டப்பணிகள் நடைபெறும் இடத்திற்கு அருகிலேயே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இப்பகுதியில் சுமார் 265 மி.மீ. அளவுக்கு கனமழை பதிவாகியுள்ள நிலையில், தொடர்ச்சியான மழைப்பொழிவே நிலச்சரிவுக்கு முக்கியக் காரணம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நிலச்சரிவு ஏற்பட்டவுடன் உள்ளூர் மக்கள் விரைந்து செயல்பட்டு பலரை பாதுகாப்பாக மீட்டனர். பின்னர் சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் மீட்புப் பணியில் இணைந்து, கனரக இயந்திரங்களின் உதவியுடன் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த விபத்தில் சுரங்கப் பணிகளுக்குப் பயன்படுத்தப்பட்ட சில வாகனங்கள் சேதமடைந்துள்ளன. அருகிலுள்ள சில வீடுகள் மற்றும் தங்கும் விடுதிகள் பாதிப்புக்குள்ளானதா என்பது குறித்து அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். முதற்கட்ட தகவல்களில் உயிரிழப்பு ஏதுமில்லை என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், பின்னர் மீட்புப் பணிகள் முன்னேறியதையடுத்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

இதனிடையே, கேரள வேளாண்மைத்துறை அமைச்சர் டி. சித்திக் மற்றும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று மீட்புப் பணிகளை நேரில் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் உயிரிழப்புகள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *