‘அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் கூட்டணி அமைப்பது அரசியல் பிழையல்ல’ என்று சொல்லி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன். இந்தக் கூற்று, அரசியல் அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் நேரத்தில், அவரை சந்தித்து பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம்.
அதிமுகவும், திமுகவும் கூட்டணி வைப்பது அரசியல் பிழையல்ல என்று நீங்கள் கூறியதற்கு என்ன அர்த்தம்?
“அதற்கடுத்து நான் சொன்னதையும் நீங்கள் பார்க்க வேண்டும். ‘இரு கட்சிகளும் திராவிட சித்தாந்தம் கொண்டவை, கூட்டணியாக இணைவதில் தவறில்லை. ஆனால், அதற்கான நகர்வுகளை பா.ஜ.க செய்வதுதான் ஆபத்து என்றும் சொல்லியிருக்கிறேன்.”
உண்மையில் இணைவதற்கான பேச்சுவார்த்தை நடந்ததா?
‘உள் அரங்கிற்குள் நடக்கும் நிகழ்வுகளை வெளியில் பேசுவது பண்பல்ல.”
திருமாவை முதல்வராக்க நாங்கள் முயற்சி மேற்கொண்டோம் என்கிறாரே தினகரன்?
அதோடு சேர்த்து, அதற்கு இடதுசாரிகள் விரும்பவில்லை’ என்கிறார். அதுதான் பிழை அதை திருமாவே ஏற்கமாட்டார். ‘இரண்டு இடங்களைப் பெற்றிருக்கும் ஒருவர் முதல்வர் ஆவதை விட, 108 இடங்களைப் பெற்றிருக்கும் ஒருவர் முதல்வர் ஆவதுதான் ஜனநாயகம் என்றுதான் சொன்னோம். அதை திருமாவளவன் மறுக்கவில்லை.”
த.வெ.க. ஆட்சிக்கு வெளியிலிருந்து ஆதரவு கொடுத்திருக்கும்போதும், நிறைய விஷயங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள், ஆனால் கடந்த ஆட்சியில் கூட்டணியில் இருந்தபோது இந்தனவுக்கு குரல் எழுப்பவில்லையே?
“தவறான கருத்து. தூய்மைப் பணியாளர் போராட்டம், போக்குவரத்துத் தொழிலாளர்கள் போராட்டம், சாம்சங் ஊழியர்கள் போராட்டம் ஆகியவற்றுக்கு ஆதரவு கொடுத்திருக்கிறோம். வன்கொடுமைகள் நடந்தபோது, அதற்கு எதிராக குரல் எழுப்பினோம். ஒருபோதும் மௌனமாக இருந்ததில்லை. ஆனாலும் ஒரு உண்மையைச் சொல்ல வேண்டும். அன்றைய சூழலில், ஆளுநருக்கும், மத்திய அரசுக்கும் எதிரான எங்களது குரல் அதிகமாக இருந்தது. அதனால், தி.மு.க. அரசுக்கு எதிரான குரல் குறைவாக இருந்ததுபோல தோன்றலாம்”
எங்கள் ஆதரவில் தான் உங்கள் ஆட்சி நடப்பதை மறந்துவிடாதீர்கள் என்று சி.பி.எம். மாநிலச் செயலாளர் சண்முகம் காட்டமாகப் பேசினார். இது பிளாக்மெயில் இல்லையா?
அதன் பொருள். ‘நீங்கள் நீதியின் பக்கம் நில்லுங்கள், உழைக்கும் மக்கள் பக்கம் நில்லுங்கள்’ என்பதுதான். பிளாக்மெயில் செய்வது கம்யூனிஸ்ட் கட்சிகளின் வழக்கமல்ல”
அப்படி ஏன் கம்யூனிஸ்டுகள் த.வெ.க. அரசைத் தாங்கிப் பிடிக்க வேண்டும்?
‘தாங்கிப் பிடிக்க எந்த எதிர்பார்ப்பும் எங்களிடம் இல்லை. ஜனநாயகத்தின் பொருட்டு, மக்கள் அதிகாரத்தைக் காக்கவே ஆதரவை வழங்கினோம். நிபந்தனையற்ற ஆதரவு என்றாலும் கூட சில அரசியல் நிபந்தனைகள் இருக்கத்தான் செய்கின்றன. மக்கள் நலன் சார்ந்த கோரிக்கையின் பக்கம் முதல்வர் நிற்க வேண்டும் பகை அரசியல், வெறுப்பரசியல், சாதி அரசியல் ஆகியவை எங்களுக்குத் தெரியாது. நாங்கள் தேர்தல் முறையில் தோற்றுக்கொண்டே இருந்தாலும், மக்களுக்கு எங்கள் மீது வெறுப்பு ஏற்படவில்லை. காலம் கனியும்போது நாடே இடது பக்கம் திரும்பும்.”
ஆனால், ம.ச.வெ. கூட்டணியில் ஏன் இடதுசாரிகள் இணையவில்லை?
‘கொள்கை ரீதியாக தி.மு.க. கூட்டணியில் இருந்தோம். சூழல் காரணமாக வெளியேறி விட்டோம். த.வெ.க. தங்கள் கொள்கைப் பிரகடனத்தை வெளிப்படுத்தி, அதன் பிரகாரம் நிற்க வேண்டும் மத்திய அரசுடன் தங்களுக்கு கொள்கை இணக்கம் இல்லை என்பதை முதல்வர் தெளிவுபடுத்த வேண்டும் மற்றவரைப் பேசவைத்து முதல்வர் அமைதி காக்கக் கூடாது விஜய் தான் அதிகாரத்தின் குறியீடு.
முதல்வர் வெளிப்படுத்தும் வரை இந்தத் தயக்கங்கள் நிலவிக்கொண்டேதான் இருக்கும். 13 கோடி மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டிருப்பது அநீதி தலைமைத் தேர்தல் ஆணையர் நீக்கப்பட வேண்டும்’ என்று சொல்லியிருக்க வேண்டும் அல்லவா? இதுதான் எங்கள் தயக்கத்துக்குக் காரணம்”
பாஜ.க.வை விஜய் எதிர்ப்பதில்லை என்பது காங்கிரஸுக்குத் தெரியாதா? அவர்கள் ஏன் த.வெ.க.வுடன் கூட்டணியில் உள்ளனர்?
காங்கிரஸும், கம்யூனிஸ்ட்களும் வேறு வேறு கட்சிகள். ஆர்.எஸ்.எஸ் கருத்தியலையும். பா.ஜ.க. அரசியலையும் எதிர்க்கும் ஒரு புள்ளியில் இரு கட்சிகளும் ஒன்றிணைகின்றன. மற்றபடி, இக்கேள்வியை நீங்கள் காங்கிரஸ் தலைவர்களிடம் தான் கேட்க வேண்டும்.”
‘எஸ்.ஐ.ஆருக்குப் பின்னால் நடைபெற்ற தேர்தல்களில் வென்ற அத்தனை அரசுகளையும் கலைத்திட வேண்டும்’ என்கிறாரே மல்லிகார்ஜுன கார்கே?
அது அவரது கருத்து. எங்களைப் பொறுத்தவரை பழைய வாக்குச்சீட்டு தேர்தல் முறைதான். சரி மின்னணு தேர்தல் முறையைக் கொண்டுவந்த காங்கிரஸே அதை இப்போது எதிர்க்கிறது. பா.ஜ.க.வுடன் இருக்கும் ஒருசில கட்சிகளைத் தவிர்த்து, எல்லாக் கட்சிகளும் இதை வலியுறுத்துகின்றன.”
த.வெ.க. அரசின் செயல்பாடுகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?
“இது முற்றிலும் புதிய அரசு. ஆறு மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை வாய்ப்பளிக்க வேண்டும். ஆனாலும் நம்பிக்கைத் தருகிற பாதையாகத் தெரியவில்லை. முதல்வர் விஜய் புதியவர் என்றாலும் அறிவுள்ளவர். மக்கள் தேர்ந்தெடுத்து விட்டார்கள் என்பதால் நாங்கள் அவரை மதிக்கிறோம். மத்திய அரசுக்கு எதிரான விஷயங்களில் முதல்வர் ஏன் மெளனிக்கிறார்? ஏன் கண்களை மூடிக்கொள்கிறார்? தவறை ‘தவறு’ என்றுகூட விஜய் கண்டிக்க மறுக்கிறார் என்ற சிந்தனை வாக்களித்த மக்களுக்கு ஏற்பட்டுவிட்டது
நாடு முழுவதும் ஏற்பட்ட தொடர் தோல்விகளால் கம்யூனிஸ்ட்டுகளுக்கான தேவை குறைந்துவிட்டதா?
தோல்விகளால் கம்யூனிஸ்ட்டுகள் இல்லாமல் போய்விட மாட்டோம். உலகம் முழுக்க எங்கள் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். கேரளாவில் தோற்றாலும், வீட்டுக்கு ஒரு கம்யூனிஸ்ட் இருக்கிறார்கள். தமிழகம் முழுவதும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு கிளைகள் உள்ளன. மக்கள் அளிக்கும் வாக்குகளில் எங்களைத் தேட வேண்டாம். அதிகாரம் முழுவதும் உங்களிடமே இருக்கட்டும். உங்களுக்கு எதிரில் கேள்வி கேட்கும் இடத்தில் நாங்கள் இருப்போம். நீதியின் பக்கம் நிற்பவர்களுக்கு மரணமும் இல்லை, தோல்வியும் இல்லை”

