கேரளாவில் கடந்த முறை ஆட்சி செய்த எல்.டி.எஃப் அரசு ஏற்கெனவே மத்திய அரசுடன் ஒப்பந்தம் செய்துகொண்ட பி.எம்-ஸ்ரீ கல்வித் திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்துவது என்று கேரள காங்கிரஸ் முதலமைச்சர் வி.டி.சதீசன் தலைமையிலான தற்போதைய அரசு முடிவு செய்துள்ளது. மத்திய அரசு ஏற்கெனவே விடுவித்த ரூ.99 கோடி மற்றும் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள ரூ.106 கோடி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் இரண்டு முக்கிய நிபந்தனைகளை அரசு முன்வைத்துள்ளது. இந்த நிபந்தனைகள் குறித்து முதலமைச்சர் வி.டி.சதீசன் அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் கூறுகையில், “பள்ளிகளின் பாடத்திட்டத்தைத் தீர்மானிப்பதில் மாநில அரசின் சுதந்திரத்தில் மத்திய அரசு எவ்விதத்திலும் தலையிடக் கூடாது. அதேபோல், பி.எம்-ஸ்ரீ திட்டத்தைச் செயல்படுத்த வேண்டிய பள்ளிகளைத் தேர்ந்தெடுக்கும் முழு அதிகாரம் மாநில அரசுக்கே இருக்க வேண்டும். இந்த இரண்டு நிபந்தனைகளையும் ஏற்றுக்கொண்டால் மட்டுமே திட்டத்தை அமல்படுத்துவோம். மதவாத அஜெண்டாக்களுக்குப் பணியாமல், மாநிலத்தின் கல்வி சுதந்திரத்தை உறுதி செய்த பிறகே இதை முன்னெடுப்போம். மத்திய அரசு நிபந்தனைகளை ஏற்கவில்லை எனில், அடுத்தகட்ட முடிவுகள் எடுக்கப்படும்” என்றார்.

இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான நடைமுறைகளை ஆய்வு செய்யவும், அரசின் கொள்கை முடிவுகளை மத்திய அரசுக்குத் தெரிவிக்கவும் அமைச்சரவை துணைக் குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. கல்வித் துறை அமைச்சர் என்.சம்சுதீன் ஒருங்கிணைப்பாளராகவும், அமைச்சர்கள் ரோசி எம்.ஜான், பி.சி.விஷ்ணுநாத், எம்.லிஜு ஆகியோர் உறுப்பினர்களாகவும் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
எல்.டி.எஃப் அரசு பதவிக்காலத்திலேயே இத்திட்டத்திற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதால், கேரளம் இந்தத் திட்டத்தின் ஓர் அங்கமாகிவிட்டது என்று குறிப்பிட்ட வி.டி.சதீசன், ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலமாகவே சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரூ.99 கோடிக்கும் அதிகமான நிதியை அரசு பெற்றுள்ளதாகவும், தற்போது கூடுதலாக ரூ.106 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், பா.ஜ.க அல்லாத ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் இது குறித்து ஆலோசனை நடத்தியுள்ளதாகவும், மாநிலங்களின் கல்வி உரிமைகளைப் பாதிக்காத வகையில் கூட்டாக முடிவெடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.