புதுச்சேரி: சாக்லேட் ஆசை காட்டி 9 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; தீர்ப்பும் வழக்கின் பின்னணியும்

Spread the love

வழக்கின் பின்னணி

புதுச்சேரி, முத்தியால்பேட்டையைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுமி, கடந்த 2024 மார்ச் மாதம் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது மாயமானார். அது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வந்த நிலையில், இரண்டு நாள்களுக்குப் பிறகு அதே பகுதியிலுள்ள கழிவு நீர் வாய்க்காலில், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமி, கை, கால்கள் கட்டப்பட்டு சடலமாக மீட்கப்பட்டார்.

சிறுமியின் உடல் கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. ஆனால் அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்யக் கூடாது என்றும், ஜிப்மர் மருத்துவமனையில்தான் செய்ய வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.

அதையடுத்து சிறுமியின் உடல், கதிர்காமம் அரசு மருத்துவமனையில் இருந்து ஜிப்மர் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. ஒன்பது வயது சிறுமி கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம், ஒட்டுமொத்த புதுச்சேரியையும் போராட்டக்களமாக மாற்றியது.

புதுச்சேரி சிறுமி கொலை வழக்கு
புதுச்சேரி சிறுமி கொலை வழக்கு

முத்தியால்பேட்டை காவல் நிலைய போலீஸார், கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டனர். எம்.பி கனிமொழி, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி ராகுல் காந்தி வரை கண்டனம் தெரிவித்ததால், தேசிய அளவில் கவனம் பெற்றது சிறுமியின் கொடூரக் கொலை. 

சிறுமியின் உடற்கூராய்வு நடைபெற்ற ஜிப்மர் மருத்துவமனை தொடங்கி, புதுச்சேரி முழுவதும் தன்னெழுச்சியாக சிறுமிக்கு நீதி கேட்டு போராட்டங்கள் வெடித்தன. முத்தியால்பேட்டை, கோட்டக்குப்பம் பகுதிகளைச் சேர்ந்த வணிகர்கள், தாங்களாகவே கடைகளை அடைத்தனர்.

கிராமப்புறப் பகுதிகளில் தங்கள் பெண் குழந்தைகளுடன், கொலை செய்யப்பட்ட சிறுமியின் புகைப்படத்தை செல்போன்களில் ஏந்தி பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பல இடங்களில் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தி போராட்டங்கள் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டன. புதுச்சேரி, தமிழகத்தை உலுக்கிய இந்த வழக்கில், அதே பகுதியைச் சேர்ந்த விவேகானந்தன் என்ற முதியவரும், கருணாஸ் என்ற இளைஞரும் கைது செய்யப்பட்டனர்.

“கஞ்சா வாங்க காசு குடுக்கறேன்…”

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கஞ்சா மற்றும் மது போதையில் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து, அதன்பிறகு கொலை செய்து வாய்க்காலில் வீசியது தெரிய வந்தது.

அதுகுறித்து அப்போது பேசிய விசாரணை அதிகாரிகள், “குழந்தை காணாமல் போய்விட்டது என்று புகார் வந்ததுமே நாங்கள் விசாரணையில் இறங்கி விட்டோம். சிறுமியின் சடலத்தைக் கைப்பற்றியதும், அதற்கு அருகில் இருந்தவர்களிடம் விசாரணை செய்தோம்.

அப்படித்தான் அங்கிருந்த கருணாஸிடம் பேசுவதற்காகச் சென்றோம். ஆனால் எங்களைப் பார்த்த அவன், `நான் எதுவும் செய்யவில்லை’ என்று சொல்லி, அவன் கையில் வைத்திருந்த பிளேடால் கையிலும், கழுத்திலும் கிழித்துக் கொண்டான்.

அப்போதுதான் எங்களுக்கு அவன் மீது சந்தேகம் எழுந்தது. அவனைப் பிடித்து விசாரித்தோம். முழு கஞ்சா போதையில் இருந்ததால், விசாரணைக்கே அவன் ஒத்துழைக்கவில்லை. சிரித்துக் கொண்டே இருந்தான். நீண்ட முயற்சிக்குப் பிறகுதான் பெரியவர் விவேகானந்தன்தான் எல்லாத்துக்கும் காரணம்னு சொன்னான்.

கொலை செய்யப்பட்ட சிறுமியின் உடல்
கொலை செய்யப்பட்ட சிறுமியின் உடல்

அதுக்கப்புறம்தான் தலைமறைவாக இருந்த விவேகானந்தனைத் தூக்கினோம். கொலை செய்யப்பட்ட சிறுமி துறுதுறுப்பானவர். அந்தப் பகுதியிலுள்ள அனைவரிடமும் நன்றாகப் பேசுவார். அப்படித்தான் அதே ஊரைச் சேர்ந்த கருணாஸ் என்பவரிடமும் பேசி வந்திருக்கிறார்.

சம்பவம் நடந்த 2-ம் தேதி கஞ்சா போதையில் இருந்த கருணாஸ், சாக்லேட் தருவதாகக் கூறி, அதே பகுதியிலுள்ள தன்னுடைய பாட்டி வீட்டுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அந்த வீட்டின் மேல் மாடியில் தனியாக வசித்து வந்த விவேககானந்தனும், கருணாஸும் ஏற்கெனவே போதை நண்பர்கள்.

அப்போது விவேகானந்தன் வீட்டில் இல்லை என்பதால், சிறுமியை அங்கு அழைத்துச் சென்று கட்டிப்பிடித்து தவறாக நடக்க முயற்சித்திருக்கிறான் கருணாஸ். அதிலிருந்து விலகிய சிறுமி `சாக்லேட் தாங்க…’ என்று கேட்டிருக்கிறது. அப்போது அங்கு வந்த விவேகானந்தன், `டேய் ராத்திரி உனக்கு கஞ்சா வாங்க காசு குடுக்கறேன். கொஞ்ச நேரம் வெளில நில்லு’ என்று கூற, கருணாஸும் வெளியே நின்றிருக்கிறார்.

“சாக்லேட் தாங்க தாத்தா…”

தொடர்ந்து, நான் சாக்லேட் தருகிறேன் என்று கூறி, சிறுமியிடம் தவறாக நடக்க முயற்சி செய்திருக்கிறார். `சாக்லேட் தாங்க தாத்தா’ என்று கேட்டுக் கொண்டிருந்த அந்தச் சிறுமி, ஒரு கட்டத்தில் விவேகனந்தனின் செய்கைகளைப் பார்த்து `வலிக்குது தாத்தா விடுங்க’ அழ ஆரம்பித்திருக்கிறார்.

ஆனால் மது மற்றும் கஞ்சா போதையில் இருந்த விவேகானந்தன், சிறுமியின் வாயைப் பொத்தி தன் வக்கிரத்தை அரங்கேற்ற முயற்சித்திருக்கிறார். அதில் சிறுமி மயங்கிய நிலையிலும், தன்னுடைய வக்கிரத்தை நிறைவேற்றியிருக்கிறார். அதன் பிறகு சிறுமியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து, தன்னுடைய வேட்டி, போர்வையால் சுற்றி, கருணாஸின் உதவியுடன் வீட்டின் பின்புறம் இருந்த சாக்கடையில் வீசியிருக்கிறார்.

அத்துடன் உடல் மேலே வந்துவிடக் கூடாது என்று, அதன்மீது கல்லையும் வைத்திருக்கிறார்கள். அதனால்தான் நாங்கள் முதலில் தேடும்போது உடல் கிடைக்கவில்லை. மூன்றாவது நாள் தண்ணீரில் உடல் ஊதி மேலே வரும்போதுதான் தெரிந்தது” என்றனர்.

புதுச்சேரி சிறுமி வழக்கு | கருணாஸ், விவேகானந்தன்
புதுச்சேரி சிறுமி வழக்கு | கருணாஸ், விவேகானந்தன்

அதையடுத்து சிறுமியைக் கொடூரமாகக் கொலை செய்த குற்றவாளிகளைத் தூக்கிலிட வேண்டும் என்று பொதுமக்கள், மாணவர்கள், சமூக அமைப்பினர் போராட்டத்தில் குதித்தனர். அதேபோல குற்றவாளிகளுக்காக நாங்கள் யாரும் ஆஜராகப் போவதில்லை என்று அறிவித்தனர் புதுச்சேரி வழக்கறிஞர்கள்.

அதையடுத்து, `விரைவு நீதிமன்றத்தில் ஆறே மாதங்களில் குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கப்படும்’ என்று அறிவித்தார், அப்போதைய ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன். காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த விவேகானந்தன், கடந்த 2024-ம் ஆண்டு அங்கேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புதுச்சேரி போக்சோ விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த விசாரணை முடிவடைந்த நிலையில், கருணாஸ் குற்றவாளி என்று இன்று தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் மே 5-ம் தேதி தண்டனை விபரங்கள் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.  

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *