கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திரமும், `கே.ஜி.எஃப்” (KGF) படத்தின் மூலம் உலக அளவில் பிரபலமானவருமான நடிகர் யஷ், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் தனது தீவிர ரசிகர் ஒருவருடன் வீடியோ காலில் பேசி, அவருக்குத் தைரியம் அளித்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வீடியோ காலில் பேசிய ரசிகரின் பெயர் சுனில். இவர் சிவமொக்கா மாவட்டத்தைச் சேர்ந்தவர், யஷ்ஷின் ரசிகர் மன்றத்தின் மாவட்டத் தலைவராக நீண்ட காலமாகச் செயல்பட்டு வருபவர். குடல் புற்றுநோயால் (Rectal Cancer) பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
தனது தீவிர ரசிகர் ஒருவர் இவ்வளவு கடுமையான நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை அறிந்த நடிகர் யஷ், தனது படப்பிடிப்பு வேலைகளுக்கு (டாக்சிக், ராமாயணம்) இடையில் நேரத்தை ஒதுக்கி, வீடியோ கால் செய்தார்.
சுனிலின் உடல்நலம் குறித்து அக்கறையுடன் விசாரித்ததுடன், அவரது குடும்பத்தினருடனும் பேசி, அவர்களுக்கு மன உறுதி அளித்துள்ளார். சுனிலின் நீண்டகால அர்ப்பணிப்பையும், ரசிகர் மன்றப் பணிகளில் அவர் காட்டிய ஈடுபாட்டையும் அன்புடன் நினைவு கூர்ந்தார். “நான் உனக்குத் துணையாக இருக்கிறேன்” என்று உறுதியளித்து ஊக்கப்படுத்தினார்.