அன்பிற்குரிய விஜய் அவர்களே,
“நாளைய தீர்ப்பி”ல் தொடங்கி, “மாண்புமிகு மாணவன்” என்பதிலிருந்து இன்று “மாண்புமிகு முதல்வர்” என்ற உங்களது இந்தப் பயணத்தில், பெரும்பாலானோரின் இளகிய நெகிழ்வான அன்பையும், நம்பிக்கையையும் சம்பாதித்து இருக்கிறீர்கள். அந்த அன்பின் பரிசு தான் இன்றைய அரியாசனம். ஏதோ ஒரு அவமானத்தின், வலியின், ஆவேசம் தான் உங்களை இந்த இடத்திற்கு உந்தி தள்ளியிருக்கிறது என்று தோன்றுகிறது.
வானத்தை வில்லாக வளைப்பது போன்ற இந்த பெருவெற்றியை, கவிஞர் ‘வாலி’ யின் வார்த்தைகள் கொண்டு வர்ணிப்பது மிகப்பொருத்தமாக இருக்கும்.
“வியந்தது வான்;
மகிழ்ந்தது மண்;
இசைத்தது காற்று –
இன்னிசைப் பண்!!
உண்மையிலேயே எல்லோருமே, ஏதோ ஒரு விதத்தில் இந்த அசாத்திய வெற்றிக்கு ஆச்சரியப்பட்டார்கள்…. சந்தோஷப்பட்டார்கள்…. கொண்டாடினார்கள்.
எப்படி இருந்தாலும் ஒரு மாற்றத்திற்கான முகவரியாக மக்கள் அளித்திருக்கும் “இன்றைய தீர்ப்பு”, நன்மைக்கான, நல்ல முன்னேற்றத்திற்கான பாதையை காட்டும் என்று நம்புகிறார்கள். அவர்கள் மீதான உங்கள் அன்பும், அக்கறையும், உண்மை என்றும், அதை மனதிற்கு மிகவும் நெருக்கமாகவும் உணர்கிறார்கள்.
யாருமே எதிர்பார்க்காத ஒரு பெருவெற்றி, பேரன்பின் வெற்றி. தங்களை நம்பி, தங்களின் பின் வந்தவர்களையும், அரசவையில் இருப்பவர்களையும், அனுபவமும், நேர்மையும், நல்லெண்ணமும் கொண்ட அதிகாரிகளின் துணைகொண்டு சரியாக நடந்து, வழி நடத்தி, ஆச்சரியங்களை அதிகப்படுத்திக் கொண்டே செல்வதில் தான் வெற்றிக்கான உண்மையான பலனும் சந்தோஷமும் ஒளிந்திருக்கிறது.
முதல்வரான பின் வரும் முதல் பிறந்தநாள். பெருங்கடமை உங்கள் முன்னால். அனைத்து சவால்களையும் சமாளித்து, சாதனைகளாக மாற்ற எல்லாம் வல்ல இறையருள் உங்களுக்கு துணையிருக்க வேண்டுகிறோம். வாழ்த்துகிறோம்.
இனிய இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் விஜய் சார்!! வாழ்க வளமுடன்!!
என்றும் அன்புடன் உங்கள் நடனத்தின் பெரும் ரசிகை,
சியாமளா கோவிந்தராஜு, திருச்சி.