பூந்தமல்லி வடபழனி மெட்ரோ: 'சரித்திரத்தில் மறைக்க முடியாத கழக அரசின் இடம்!'- ஸ்டாலின் அறிக்கை

Spread the love

பூந்தமல்லி – போரூர் – வடபழனி இடையேயான சென்னை மெட்ரோ வழித்தடம் அக்டோபர் 11-ஆம் தேதி மக்கள் பயன்பாட்டுக்கு வரவுள்ள நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அதில், ” சென்னை மெட்ரோ இரயில் திட்டம் தலைவர் கலைஞர் அவர்களின் ஆட்சிக்காலத்தில், நான் துணை முதலமைச்சராக இருந்தபோது தொடங்கப்பட்டது. இதற்காக, அப்போது நான் ஜப்பான் சென்று JICA-வின் நிதியைப் பெற்று வந்து இந்தத் திட்டத்தை மேற்கொண்டோம்.

இதனையடுத்து சென்னை மெட்ரோ இரயிலின் முதற்கட்டப் பணிகள் நிறைவுபெற்றபோது, விமான நிலையம் – சென்னை சென்ட்ரல் இரயில் நிலையம் – கோயம்பேடு புறநகர்ப் பேருந்து முனையம் எனச் சென்னையின் முக்கியமான போக்குவரத்து மையங்கள் இணைக்கப்பட்டு, சென்னையின் வளர்ந்து வரும் போக்குவரத்து நெரிசலுக்கு மாமருந்தாகவும், மாநகரின் பொதுப் போக்குவரத்து அமைப்பில் மிகப் பெரும் மைல்கல்லாகவும் இது அமைந்தது. தற்போது இத்தடத்தில் விம்கோ நகர் வரை இரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

மெட்ரோ
மெட்ரோ

குறிப்பாக, “சென்னைக்கு மெட்ரோ இரயில் தேவையில்லை, மோனோ இரயில் போதும்” என அடுத்து வந்த அ.தி.மு.க. அரசு இதனைத் தடை செய்ய நினைத்து, அது முடியாமல் போன நிலையில், பின்னர் அவர்களே முடிவுற்ற பணிகளைத் தொடங்கியும் வைத்தனர். அதுமட்டுமின்றி, 2015-ஆம் ஆண்டு சென்னைப் பெருவெள்ளத்தின்போது சாலைகள் மூழ்கித் துண்டிக்கப்பட்ட நிலையில், இலட்சக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மெட்ரோ மூலமாகப் பயணித்தபோது சென்னைக்கு மெட்ரோ இரயிலின் தேவை அனைவராலும் உணரப்பட்டது.

இதனையடுத்து, சென்னை மெட்ரோ இரயிலின் இரண்டாம் கட்டப் பணிகள் கடந்த அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் பல்வேறு காரணங்களால் சுணக்கம் கண்டிருந்த நிலையில், 2021-ஆம் ஆண்டு நமது திராவிட மாடல் ஆட்சி அமைந்ததும் அதனை விரைவுபடுத்தினோம். இதற்கான ஒன்றிய அரசின் பங்களிப்பு நிதி மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக விடுவிக்கப்படாமல் இருந்த நிலையிலும், பணிகளைத் தொய்வின்றி மேற்கொண்டோம்.

2021-ஆம் ஆண்டு தொடங்கி, பிரதமர் அவர்களை நான் நேரில் சந்திக்கும்போதெல்லாம் இதுகுறித்த கோரிக்கை மனுவினை அளித்து, ஒன்றிய அரசின் பங்கினைக் காலதாமதம் செய்யாமல் விடுவிக்கத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தேன். கடுமையான நிதி நெருக்கடிக்கு இடையிலும், 2024 செப்டம்பர் நிலவரப்படி, மாநில அரசின் சொந்த நிதியிலிருந்து 11,762 கோடி ரூபாயும், வெளிநாட்டு நிதி நிறுவனங்களின் கடனுதவி மூலம் 6,802 கோடி என மொத்தம் 18,564 கோடி ரூபாயைச் செலவிட்டு நமது அரசில் இரண்டாம் கட்டப் பணிகளை நிறுத்தாமல் தொடர்ந்தோம்.

குறிப்பாக, 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இதுகுறித்த விளக்கமான கடிதம் ஒன்றை மாண்புமிகு பிரதமர் அவர்களுக்கு அனுப்பி, தொடக்கத்தில் வாக்களித்தபடி 50:50 பங்கு மூலதன அடிப்படையிலேயே சென்னை மெட்ரோ இரயிலின் இரண்டாம் கட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். முழுக்க மாநில அரசின் நிதியில் மேற்கொள்வதால் மாநில அரசுக்குப் பெரும் நிதி நெருக்கடி ஏற்படுவதோடு, பணிகளும் தாமதமாவதை எடுத்துக் கூறினேன்.

இதனைத் தொடர்ந்து, 2024-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நான் பிரதமரை நேரில் சந்தித்தபோதும் இதுகுறித்துப் பேசினேன். இதற்குப் பின்னர்தான், அக்டோபர் மாதம் நமது கோரிக்கை ஒன்றிய அரசால் ஏற்கப்பட்டது. ஒன்றிய அமைச்சர் மனோகர் லால் கட்டர் அவர்களையும் சென்னை மெட்ரோ இரயில் தலைமையகத்தில் சந்தித்து, இதற்காக நன்றி தெரிவித்து மெட்ரோ விரிவாக்கத்தை விரைந்து முடிக்க வேண்டியதன் அவசியம் குறித்து அவரிடம் பேசினேன்.

பல்வேறு தருணங்களில் சென்னை மெட்ரோவின் இரண்டாம் கட்டப் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தேன். சென்னை, மாதவரம் பால் பண்ணை அருகில், சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் வழித்தடம் 3-இன் சுரங்கப்பாதை கட்டுமானப் பணிகளில், மாதவரம் பால் பண்ணை மெட்ரோ நிலையத்திலிருந்து மாதவரம் நெடுஞ்சாலை மெட்ரோ நிலையம் வரை 1.4 கி.மீ நீளத்திற்கு சுரங்கம் தோண்டும் பணியினை 13-10-2022 அன்று தொடங்கி வைத்தேன்.

திமுக தலைவர் ஸ்டாலின்

2025-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், கெல்லீஸ் முதல் தரமணி வரையிலான சுரங்க வழித்தடப் பகுதியில் கிரீன்வேஸ் சாலை மெட்ரோ நிலையம் முதல் அடையாறு சந்திப்பு மெட்ரோ நிலையம் வரையிலான பணியில், 300 மீட்டர் அடையாறு ஆற்றிற்குக் கீழ் செல்லும் சவாலான வழித்தடப் பகுதி உட்பட மொத்தம் 1.218 கி.மீ தூரத்தைக் கடந்து அடையாறு சந்திப்பு மெட்ரோ நிலையம் அருகில் சுரங்கம் தோண்டும் இயந்திரம் வெளிவரும் பணியினைப் பார்வையிட்டு, இப்பணியை மேற்கொண்டு வருவோரை ஊக்கப்படுத்தினேன். 2025-ஆம் ஆண்டு ஜூன் மாதம், கிண்டி கத்திபாரா மேம்பாலத்தின் மேல், சென்னை மெட்ரோ இரயில் இரண்டாம் கட்டத்தில் கட்டுமானப் பொறியியலின் அதிசயமாக உருவாகி வரும் 108 அடி உயர மெட்ரோ பாலத்துக்கும் சென்று ஆய்வு மேற்கொண்டேன்.

மாதவரம் – சிறுசேரி, கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி, மாதவரம் – சோழிங்கநல்லூர் என இரண்டாம்கட்டத் திட்டப் பணிகளோடு, விமான நிலையம் – கிளாம்பாக்கம், கோயம்பேடு – பட்டாபிராம், பூந்தமல்லி – சுங்குவார்சத்திரம், தாம்பரம் – கிண்டி, கலங்கரை விளக்கம் – உயர்நீதிமன்றம், சிறுசேரி – கலைஞர் பன்னாட்டு அரங்கம் என மூன்றாம் கட்ட மெட்ரோ விரிவாக்கப் பணிகளுக்காகவும் கனவு கண்டு உழைத்தோம்.

இவற்றுக்கிடையே, MRTS சேவையையும் சென்னை மெட்ரோ நிர்வாகமே எடுத்துச் செயல்படுத்திடுவதற்கான முன்மொழிவுக்கு ஒப்புதல் பெறுவதற்கும் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டோம். அதற்கும் தற்போது ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. சென்னை போலவே கோவை, மதுரை மாநகரங்களில் மெட்ரோ அமைக்க ஒப்புதல் வேண்டியும் ஒன்றிய அரசுடன் போராடினோம். CUMTA அமைப்புக்குப் புத்துயிரூட்டி, சென்னையின் போக்குவரத்து வசதிகள் அனைத்தையும் இணைத்து, Chennai One என்ற ஒரே செயலியில் அனைத்துப் பயணச்சீட்டுகளையும் டிஜிட்டல் முறையில் பெறும் முறையை அறிமுகப்படுத்தினோம்.

வரும் 11-ஆம் நாள் மாண்புமிகு பிரதமர் அவர்களால் திறந்து வைக்கப்பட இருக்கும் பூந்தமல்லி – போரூர் – வடபழனி வழித்தடத்தை 2025-ஆம் ஆண்டு இறுதிக்குள்ளேயே திறந்திட அனைத்து முயற்சிகளையும் திராவிட மாடல் அரசில் செய்தோம். இருப்பினும், சிக்னல் அமைப்புக்கான ஒப்புதலை இரயில்வே வாரியம் வழங்குவதில் ஏற்பட்ட தாமதத்தால் அது இயலாமல் போனது. அச்சூழலில் சட்டமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததையடுத்து, திட்டமிட்டபடி நமது ஆட்சிக்காலத்தில் இதனைத் திறந்து வைக்க முடியவில்லை.

எனினும், ஒருவழியாகச் சென்னை மக்கள் ஆவலோடு எதிர்பார்த்திருந்த இந்த வழித்தடம் பயன்பாட்டுக்கு வர இருப்பதை அறிந்து மிகுந்த மகிழ்ச்சியும் மனநிறைவும் கொள்கிறேன். ஆண்டுக்கணக்கில் நான் சுமந்து வளர்த்தெடுத்த சென்னை மெட்ரோ இரயில் எனும் குழந்தை அடியெடுத்து வைப்பதில் தாய்மை உணர்வுடன் பெருமை கொள்கிறேன்.

இவ்வேளையில் வள்ளுவர் கோட்டம் குறித்த ஒரு வரலாற்று நிகழ்வுதான் என் நினைவுக்கு வருகிறது. தலைவர் கலைஞர் அவர்கள் பார்த்துப் பார்த்து உருவாக்கிய வள்ளுவர் கோட்டத்தை 1976-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் திறந்து வைக்க அன்றைய கழக அரசு நாள் குறித்திருந்த நிலையில், நெருக்கடி நிலையை எதிர்த்ததற்காக ஜனவரி மாத இறுதியிலேயே கழக அரசு கலைக்கப்பட்டது. ஏப்ரல் மாதம் அன்றைய குடியரசுத் தலைவர் பக்ருதீன் அலி அகமது அவர்களால் வள்ளுவர் கோட்டம் திறந்து வைக்கப்பட்டது. கலைஞர் அவர்கள் அடிக்கல் நாட்டிய செய்தி இடம்பெற்றிருந்த கல்வெட்டைக் கூட அங்கிருந்து அப்புறப்படுத்திவிட்டு அந்த விழா நடைபெற்றது.

திமுக ஸ்டாலின்
திமுக ஸ்டாலின்

அப்போது முரசொலியில், ‘கோட்டம் திறக்கப்படுகிறது, குறளோவியம் தீட்டப்படுகிறது’ என்ற தலைப்பில் நீண்ட கடிதம் ஒன்றை எழுதினார் முத்தமிழறிஞர் கலைஞர். அதில், “ஆசைக்கிள்ளைக்கு இனிய திருமண விழா நடைபெறும்போது, தாலிகட்டும் காட்சியினைக் காணமுடியாமல் மணப்பந்தலுக்கு வெளியே நிற்கின்ற தாயின் மனதில் ஒருவிதத் தவிப்பு இருந்தாலும், தன் அன்புச் செல்வத்துக்கு நடைபெறும் மணவிழா குறித்த மகிழ்ச்சி பொங்கிடத்தானே செய்யும்! என் தங்க உடன்பிறப்பே! அந்தத் தாயின் மகிழ்ச்சியை நான் பெறுகிறேன் இன்று! என் வாழ்நாளின் குறிக்கோள்களில் ஒன்றான வள்ளுவர் கோட்டத் திறப்பு விழாவை அகக் கண்ணால் காணுகிறேன், ஆனந்தப்பள்ளு பாடுகிறேன்” என்று நெகிழ்ச்சியோடு எழுதினார். நெடுநாள் ஆசை நிறைவேற்றம், நெஞ்சில் இன்பக் கொடியேற்றம் என மகிழ்ந்தார்.

அக்கடிதத்தில் தலைவர் கலைஞர் அவர்கள் குறிப்பிட்ட ஒரு வாசகம் இப்போதும் அப்படியே பொருந்திப் போகிறது. ”சரித்திரத்தில் நமக்குக் கிடைக்கிற இடம், சலுகையால் பெறக்கூடியது அல்ல! எது நேர்ந்தாலும் என்ன நேர்ந்தாலும் மறைக்க முடியாத இடம்! அதே நம்பிக்கையுடன்தான் இன்று நடக்கும் வள்ளுவர் கோட்டத் திறப்பு விழாவை அகக்கண்ணால் காணுகிறேன்” என்பதுதான் அது! சென்னை மெட்ரோ இரயில் நிறைவேற்றத்திலும் கழக அரசின் இடம் சரித்திரத்தில் எவராலும் மறைக்க முடியாத இடமாக நிலைபெற்றிருக்கும்.

சென்னை மெட்ரோ இரயில் மட்டுமல்ல, சென்னை மாநகரில் காணும் உட்கட்டமைப்பு வளர்ச்சித் திட்டங்கள் எல்லாவற்றிலும் தி.மு.க அரசின் பெயர்தான் இருக்கும். கழக ஆட்சிக்காலங்களில்தான் நவீன தமிழ்நாடு கட்டியெழுப்பப்பட்டது என்பதை ஒவ்வொரு மாவட்டத்திலும் உயர்ந்து நிற்கும் வளர்ச்சிச் சின்னங்கள் பறைசாற்றும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *