தேர்தல் வியூகவகுப்பாளரும், ஜன சுராஜ் கட்சியின் நிறுவனருமான பிரசாந்த் கிஷோர், பாட்னாவின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஓர் ஆசிரமத்திற்கு குடிபெயர்ந்துவிட்டதாக தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக பீகாரில் தர்பங்கா பகுதியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “நேற்றிரவு, பாட்னாவில் நான் வசித்து வந்த இல்லத்தைவிட்டு வெளியேறி IIT-பாட்னாவுக்கு அருகில் அமைந்துள்ள பீகார் நவ்நிர்மாண் ஆசிரமத்தில் தங்கிவிட்டேன். அடுத்த சட்டமன்றத் தேர்தலில் ஜன சுராஜ் கட்சி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்புகிறேன். அதுவரை நான் ஆசிரமத்தில்தான் இருப்பேன். தேர்தலுக்குப் பிறகு முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவரால், பொருளாதார நெருக்கடியின் காரணமாக மக்கள் இடம்பெயர்வதைத் தடுக்க முடியவில்லை.
அதனால் அவரே சட்டமன்றத்திலிருந்து நாடாளுமன்றத்துக்கு சென்றுவிட்டார். அவர் அங்கு செல்வதற்கு முன்பு தன் மகன் அரசியலில் நிலையான இடத்தை பெற்றுவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து, அதற்கு அஸ்திவாரமிட்டிருக்கிறார்.” என நிதிஷ் குமார் முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அவரின் மகன் நிஷாந்த் குமாரை அமைச்சரவையில் இடம்பெறச் செய்ததை குறிப்பிட்டு பேசினார்.