
2026 மே 12 அன்று ‘தி லான்செட்’ மருத்துவ இதழில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. உலகெங்கிலும் உள்ள 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிபுணர்களைக் கொண்ட குழு, பத்தாண்டு கால ஆராய்ச்சிக்குப் பிறகு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பிசிஓஎஸ் ஏன் பிஎம்ஓஎஸ் என அழைக்கப்பட வேண்டும்? பெண்கள் இதைப் பற்றி தெரிந்துகொள்ள வேண் டிய அவசியம் என்ன? என்பது குறித்து அறிய மகப்பேறு மற்றும் கருவுறுதல் சிகிச்சை நிபுணர் டாக்டர் சி. கீதா ஹரிப்ரியாவை சந்தித்தோம்.
பிசிஓஎஸ் இனி பிஎம்ஓஎஸ்… ஏன் இந்த மாற்றம்?
“உலகளவில் எட்டு பெண்களில் ஒருவரை பிசிஓஎஸ் பாதிக்கிறது. 170 மில்லியனுக்கும் அதிகமான பெண்கள் இந்த பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், பிசிஓஎஸ் என்றால் சினைப்பையில் இருக்கும் நீர்க்கட்டி பிரச்னை மட்டுமே என்று தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
பிசிஓஎஸ் குறித்த குழப்பங்கள், அதனால் ஏற்படும் வளர்சிதை மாற்ற கோளாறுகள் பற்றிய விழிப்புணர்வு இன்மை, மேலும் இது கருப்பையை மட்டுமே பாதிக்கும் பிரச்னை என்ற தவறான புரிதல் காரணமாக, பல பெண்கள் கருவுறுதல் சிகிச்சையில் மட்டும் சுவனம் செலுத்தி மற்ற உடல்நல சிக்கல்களை அலட்சியம் செய்கிறார்கள். இந்த மனநிலையை மாற்றவும், நோயின் முழுமையான தாக்கத்தை புரியவைக்கவும் தான் பிசிஓஎஸ் என்பதற்கு பதிலாக பிஎம்ஓஎஸ் என்ற பெயர் கொண்டு வரப்பட்டுள்ளது.
பிசிஓஎஸ் குறித்து மருத்துவர்களும் ஆராய்ச்சியாளர்களும் பல ஆண்டுகளாக ஆய்வு செய்து, ஒன்றிணைந்து இந்த புதிய பெயரை அங்கீகரித்துள்ளனர். மேலும், 2028 ஆம் ஆண்டுக்குள் உலகம் முழுவதும் ‘பிசிஓஎஸ்’ என்பதற்குப் பதிலாக ‘பிஎம்ஓஎஸ்’ என்ற பெயரையே பயன்படுத்த வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளனர்.”
பிசிஓஎஸ் Vs பிஎம்ஓஎஸ்
“பிசிஓஎஸ் (PCOS) என்பது ‘பாலிசிஸ்டிக் ஓவரியன் சிண்ட்ரோம்’ என்பதின் சுருக்கம். இது சினைப்பையில் பல சிறிய முட்டை மூட்டுகள் காணப்படும் நிலையை குறிக்கும் மருத்துவ சொல். இன்சுலின் எதிர்ப்பு, ஹைப்பர் ஆண்ட்ரோஜன் எனப்படும் ஆண் ஹார்மோன் அதிகரிப்பு, சீரற்ற மாதவிடாய் போன்ற அறிகுறிகளும் இதில் காணப்படும்.
பிஎம்ஓஎஸ் (PMOS) என்பது பாலி எண்டோகிரைன் மெட்டபாலிக் ஓவரியன் சிண்ட்ரோம்’ என்பதின் சுருக்கம். அறிகுறிகள் இரண்டுக்கும் ஒன்றுதான். பிசிஓஎஸ் போன்ற அறிகுறிகள் இருந்தாலும், அல்ட்ராசவுண்ட் பரிசோதனையில் சினைப்பையில் மாற்றங்கள் தெளிவாக தெரியாமல் இருக்கலாம். இதனால், ‘பிசிஓஎஸ் இல்லை’ என்று தவறாக புரிந்துகொண்டு சிகிச்சையை தவறவிடுவதும் அல்லது தாமதமாக எடுத்துக்கொள்ளவும் வாய்ப்பு உள்ளது. ஆனால் ஹார்மோன் சமநிலையின்மை, இன்சுலின் எதிர்ப்பு, கருவுறுதல் சிக்கல்கள் போன்றவற்றை முழுமையாக மதிப்பீடு செய்து பிஎம்ஓஎஸ் என ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்க முடியும்.
சுருக்கமாகச் சொன்னால், பிசிஓஎஸ் போல தாமதமாக கண்டறியப்படாமல், உடலில் ஏற்படும் ஹார்மோன் மற்றும் வளர்சிதை மாற்ற கோளாறுகளை முன் கூட்டியே கண்டறிந்து சிகிச்சை அளிக்க உதவும் அணுகுமுறையாக பிஎம்ஓஎஸ் பார்க்கப்படுகிறது.”
பிசிஓஎஸ் பெயர் மாற்றம் ஏன் அவசியமானது?
“பிசிஓஎஸ் இருப்பவர்களுக்கு நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம், பிசிஓஎஸ் உள்ள பெண்கள் கருத்தரிக்கும் போது கர்ப்பகால நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத் தம் போன்ற சிக்கல்கள் ஏற்படும் ஆபத்து அதிகரிக்கும். மேலும், ஹைப்பர்லிபிடெமியா எனப்படும் கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைகிளிசரைட்களின் அளவு மற்றவர்களை விட அதிகமாக இருக்கக்கூடும். எதிர்காலத்தில் கர்ப்பப்பை மற்றும் மார்பகப் புற்றுநோய் ஏற்படும் ஆபத்தும் இவர்களுக்கு சற்று அதிகமாக இருக்கலாம்.
நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம். கொலஸ்ட் ரால் அதிகரிப்பு, உடல் பருமன் போன்ற உடல்நல பிரச்னைகள் இணைந்த நிலையே ‘மெட்டபாலிக் சிண்ட்ரோம்’ என அழைக்கப்படுகிறது. இந்த வளர்சிதை மாற்ற கோளாறுகள் தனித்தனியாக இருந்தாலும், ஒன்றாக சேரும்போது இதய நோய் மற்றும் பக்கவாதம் போன்ற கடுமையான பிரச்னைகளுக்கான ஆபத்தை அதிகரிக்கக்கூடும்.
பிசிஓஎஸ் உள்ளது என்று சொல்லிக் கொள்ளும் பல பெண்கள் கருவுறுதல் சிகிச்சையில் மட்டும் கவனம் செலுத்தி இந்த வளர்சிதை மாற்ற கோளாறுகளை அலட்சியம் செய்கிறார்கள். அதனால் தான், பிசிஓஎஸ் என்பது கருப்பை தொடர்பான பிரச்னை மட்டும் அல்ல; முழு உடல்நலத்தையும் பாதிக்கக்கூடிய மோசமான நிலை என்பதை உணர்த்தவேண்டியே இந்த பெயர் மாற்றம் அவசியமாகியுள்ளது.
பிசிஓஎஸ் மற்றும் பிஎம்ஓஎஸ் பரிசோதனை முறைகள் மாறுமா?
அறிகுறிகளும் பாதிப்புகளும் இரண்டிலும் பெரும்பாலும் ஒரே மாதிரியாகவே இருக்கும். பொதுவாக பிசிஓஎஸ் கண்டறிய அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் பரிசோதனை செய்யப்படும் அப்போது சினைப்பையில் பல சிறிய முட்டை மூட்டுகள் (மூட்டை போன்ற வடிவங்கள் தான் நீர்க்கட்டிகள் என்று அழைக்கப்படுகின்றன) காணப்படலாம். ஆனால் இதை ‘நீர்க்கட்டி’ என்று அழைப்பது தவறு. சினைப்பையில் அதிக எண்ணிக்கையிலான முட்டைகள் இருந்து, அவை முதிர்ச்சி அடைந்து வெளிவருவதில் தாமதம் ஏற்படும் நிலையே இது.
பிஎம்ஓஎஸ் என்ற புதிய அணுகுமுறையில், சினைப்பை மாற்றங்களை கண்டறியும் ஸ்கேன் மட்டும் போதுமானதாக கருதப்படாது. அதோடு சுகர், பிபி, கொலஸ்ட்ரால் அளவு, உடல் பருமன், ஹார்மோன் சமநிலை போன்றவற்றையும் முழுமையாக பரிசோதனை செய்ய வேண்டியிருக்கும்.
மேலும், ஆண் ஹார்மோன் அதிகரிப்பால் முகப்பருக்கள் அதிகரித்தல், முகம் மற்றும் உடலில் தேவையற்ற இடங்களில் முடி வளர்தல் (ஹிர்சுட்டிசம்), மாதவிடாய் சீரற்ற நிலை போன்ற அறிகுறிகளையும் கவனத்தில் கொண்டு அதற்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்”.
பிசிஓஎஸ் என்பதற்கும் பிஎம்ஓஎஸ் என்பதற்கும் சிகிச்சை முறைகள் மாறுபடுமா?
“பெரும்பாலான பெண்கள் கருவுறுதல் சிகிச்சைக்காக வரும்போதுதான் தங்களுக்கு பிசிஓஎஸ் இருப்பதை அறிகிறார்கள். அப்போது சினைப்பையில் காணப்படும் சிறிய முட்டை மூட்டுகளின் வளர்ச்சியை தூண்டும் வகையில் மருந்துகள் அளித்து, முட்டை முதிர்ச்சி அடைந்து வெளியே வரும் காலத்தில் கருவுறுதலுக்கான சிகிச்சை இருக்கும்.
முன்கூட்டியே பிசிஓஎஸ் கண்டறியப்படும் பெண்களுக்கு மாதவிடாய் சீராக வரவும், முட்டை முதிர்ச்சி இயல்பாக நடைபெறவும் ஹார்மோன் சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. சிலருக்கு பார்டர்லைனில் சுகர் இருக்கும். அவர்களுக்கு மெட்ஃபார்மின் போன்ற மருந்துகளும் வழங்கப்படலாம்.
பொதுவாக பிசிஓஎஸ் சிகிச்சையில் சினைப்பை செயல்பாடு, முட்டை வளர்ச்சி மற்றும் மாதவிடாய் சீராக வரசெய்வது போன்றவற்றில் அதிக சுவனம் செலுத்தப்படுகிறது. ஆனால் பிஎம்ஓஎஸ் சிகிச்சை அதைவிட விரிவான அணுகுமுறையாக இருக்கும்.
குறிப்பாக வளர்சிதை மாற்ற (மெட்ட பாலிக்) பிரச்னைகளில் கூடுதல் சுவனம் செலுத்தப்படும். வாழ்க்கை முறை மாற்றங்கள். உணவு முறை, எடை மேலாண்மை உடற் பயிற்சி, மாதவிடாய் ஒழுங்குப்படுத்தும் மருந்துகள், ஹார்மோன் சமன்செய்தல் என தொடங்கி அறிகுறிகள் நிர்வகிப்பது முதல் நீண்டகால உடல்நல பிரச்னைகளின் அபாய த்தை குறைப்பது வரை கவனம் செலுத்துகிறது.
பிஎம்ஓஎஸ் அடிப்படையிலான பரிசோத னைகள் மூலம் கருவுறாமை பிரச்னை களை முன்கூட்டியே கண்டறிவதுடன், எதிர்காலத்தில் நீரிழிவு, உயர் ரத்த அழுத் தம், கொலஸ்ட்ரால் அதிகரிப்பு, இதய நோய்கள் போன்ற ஆபத்துகளையும் குறைக்க முடியும். அதற்கேற்ப மகப்பேறு நிபுணர், எண்டோகிரைனாலஜிஸ்ட், நீரிழிவு நிபுணர் உள்ளிட்ட பல துறை மருத்துவர்கள் இணைந்து சிகிச்சை அளிக்க வேண்டியிருக்கும்.”
பெண்கள் அலட்சியம் செய்யக்கூடாத அறிகுறிகள் என்னென்ன?
“மாதவிடாய் தாமதமாக வருவது, அதிக இரத்தப்போக்கு உடல் எடை அதிகரிப்பு, எடை குறைப்பதில் சிரமம், ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படும் முகப்பருக்கள், முகம் மற்றும் உடலில் தேவையற்ற இடங்களில் முடி வளர்தல், முடி மெலிதல், சோர்வு, மனநிலை மாற்றங்கள் போன்ற அறிகுறிகள் இருந்தாலே மருத்துவரை சந்திக்க வேண்டும். கருவுறுதல் பிரச்னைகள் ஏற்படும் வரை காத்திருக்காமல், பருவமடைந்த பிறகு குறிப்பிட்ட இடைவெளியில் மகப்பேறு மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது பல பாதிப்புகளைத் தவிர்க்க உதவும்”
பிசிஓஎஸ் என்பது கருவுறுதல் பிரச்னையை மட்டும் ஏற்படுத்தும் நிலை அல்ல; உடலின் பல்வேறு அமைப்புகளையும் பாதிக்கக்கூடிய ஒரு வளர்சிதை மாற்ற கோளாறு என்பதால் தான் அதை பிஎம்ஓஎஸ் என அழைக்கத் தொடங்கியுள்ளனர்.
பெண்கள் தங்களின் உடல்நலத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய அவசி யத்தை மருத்துவத் துறை மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகிறது.