India
oi-Vigneshkumar
கான்பூர்: பெண்கள் IAS அதிகாரி ஆக வேண்டும் என்று கனவு காணும் முன், முதலில் சிறந்த தாயாக இருக்க வேண்டும் என்று உத்தரப் பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல் கூறியுள்ளது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே பெண்கள் தங்கள் வாழ்க்கையில் முன்னேறப் பல தடைகளை சமூகம் ஏற்படுத்தி வரும் நிலையில், அம்மா ஆன பிறகே ஐஏஎஸ் ஆக வேண்டும் என்பது போல ஆளுநர் கூறியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
நமது நாட்டில் பெண்களுக்கு உரிமைக்காகப் பலரும் குரல் கொடுத்து வருகிறார்கள். பெண்கள் என்றாலே குழந்தை பெற்று கொண்டு, குடும்பத்தைக் கவனிக்க வேண்டும் என்பதே இங்கு பலரது எண்ணமாக இருக்கிறது. அதை தாண்டி, பல தடைகளை உடைத்தே பெண்கள் வாழ்க்கையில் பல சாதனைகளை படைத்து வருகிறார்கள்.

திருமணம்
இதற்கிடையே கான்பூரில் உள்ள பல்கலைக்கழகத்தின் 41-வது பட்டமளிப்பு விழாவில் பேசிய 84 வயதான ஆளுநர் ஆனந்திபென் படேல் கூறியுள்ள சில கருத்துகள் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதாவது திருமணத்திற்கு பிறகும் பெண்கள் கல்வி மற்றும் தொழிலில் முன்னேற வேண்டும் என்றாலும், குடும்ப பொறுப்புகளையும் சமமாகக் கவனிக்க வேண்டியது அவசியம் என்று வலியுறுத்தினார். கல்வி என்பது பட்டங்கள் மற்றும் மதிப்பெண்களை மட்டுமே குறிக்காது என்ற அவர், நல்ல பண்புகள், குடும்ப மதிப்புகள் மற்றும் சமூகப் பொறுப்புணர்வையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்..
பட்டமளிப்பு விழாவில் அங்கிருந்த மாணவிகள் மத்தியில் உரையாற்றிய ஆளுநர், “நீங்கள் IAS அதிகாரியாகவோ, ஆசிரியராகவோ ஆகலாம். ஆனால் அதற்கு முன்பு சிறந்த தாயாக மாற வேண்டும். வீட்டிலேயே உணவை எப்படி சமைப்பது என்பதையும் அனைவரும் தெரிந்திருக்க வேண்டும். மேலும், திருமணத்திற்குப் பிறகு பெண்கள் தங்களது கல்வியை நிறுத்தக்கூடாது. பெண்கள் தங்கள் அறிவு மற்றும் திறமைகளை குடும்பம், சமூகம் மற்றும் நாட்டின் முன்னேற்றத்திற்காக பயன்படுத்த வேண்டும்.
கண்காணிப்பு
குழந்தைகள் வளர்ப்பில் பெற்றோர்களுக்கும் மிக பெரிய பங்கு இருக்கிறது. குழந்தைகள் பள்ளி மற்றும் கல்லூரிகளில் சேர்ந்த பிறகும் அவர்களின் நடவடிக்கைகளைத் தொடர்ந்து கவனிக்க வேண்டும். குழந்தைகள் என்ன செய்கிறார்கள் என்பதை பெற்றோர் அறிந்திருக்க வேண்டும். இந்த கண்காணிப்பில் ஏற்படும் சிறிய தவறுகூட அவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கக்கூடும்” என்றார்.
போதை பொருள்
பல்கலைக்கழக விடுதிகளில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வருவதாக கவலை தெரிவித்த ஆளுநர், ராஜ்பவன் அமைத்த கண்காணிப்பு குழு ஆய்வின் போது, உணவு டெலிவரி பெட்டிகள் மூலமாகப் போதைப்பொருள் கடத்தப்பட்ட சம்பவங்கள் கண்டறியப்பட்டதாகக் கூறினார். பெரும் போராட்டத்திற்கு பிறகே அந்த நெட்வொர்க் முறியடிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
வன்முறை
அவர் மேலும் பேசுகையில், “இப்போதும் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை மற்றும் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. சமூகத்தில் ஒழுக்க மதிப்புகள் குறைந்து வருவதே இதற்குக் காரணம். பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்வது சமூகம் எவ்வளவு மோசமான நிலையில் இருக்கிறது என்பதையே காட்டுகிறது. கல்வி அறிவுக்கு இணையாக ஒழுக்க மதிப்புகளும் முக்கியமானவை” என்றார்.
இதேபோல கடந்த சில நாட்களுக்கு முன்பு வேறு ஒரு நிகழ்ச்சியில் பேசிய ஆனந்திபென் படேல், திருமணத்திற்கு முன் இளைஞர்கள் பொருளாதார ரீதியாக தன்னிறைவு அடைய வேண்டும் என்றும் அதன் பிறகே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என அட்வைஸ் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது..

