திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த கண்ணமங்கலம் – வேலூர் இடையிலான வல்லம் டோல்கேட் அருகாமையில் நேற்று இரவு காரை நிறுத்திவிட்டு, அதில் பயணித்த 2 பேர் மது குடித்திருக்கின்றனர்.
போதை தலைக்கேறியதும் சாலையில் சென்ற மற்ற வாகன ஓட்டிகளுக்கு அவர்கள் இடையூறு ஏற்படுத்தியிருக்கின்றனர்.
வேலூரில் இருந்து விழுப்புரம் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தையும் மடக்கி ரகளை செய்திருக்கின்றனர். அப்போது, பேருந்து ஓட்டுநரும், நடத்துநரும் தங்களின் செல்போனில் அவர்களை வீடியோ எடுத்திருக்கின்றனர்.
இதனால், ஆத்திரமடைந்த போதை ஆசாமிகள் இருவரும் ஓட்டுநரையும், நடத்துநரையும் தாக்க முயன்றிருக்கின்றனர். இதையடுத்து, பயணிகள் கீழே இறங்கி வந்து அவர்களைக் கண்டித்திருக்கின்றனர். பின்னர், பேருந்து அங்கிருந்து புறப்பட்டுச் சென்றிருக்கிறது.

இது குறித்து தகவலறிந்ததும் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கண்ணமங்கலம் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீஸார் அங்கு சென்று மதுபோதையில் அட்டகாசம் செய்த இருவரையும் பிடித்திருக்கிறார்.
கீழ்பள்ளிப்பட்டு கிராமத்திலுள்ள அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரான வாசுதேவன் (வயது 44), மற்றொருவர் அவரது நண்பன் குமரகுரு (28) எனத் தெரியவந்தது. இருவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று தகராறு சம்பந்தமாக விசாரித்தபோது, போலீஸாருடனும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.