பெண் காணாமல்போன வழக்கு; அலட்சியம் காட்டிய 28 போலீஸார் சஸ்பெண்ட்; கோர்ட் தலையிட்டு அதிரடி

Spread the love

ஜார்க்கண்ட் மாநிலம் பொகாரோ மாவட்டத்தில் உள்ள பிண்டஜோரா இடத்தை சேர்ந்த புஷ்பா (18) என்ற இளம்பெண் கடந்த ஆண்டு ஜூலை மாதம் காணாமல் போனார். இதுதொடர்பாக அவரின் தாயார் ரேகா தேவி போலீஸில் புகார் செய்திருந்தார். ஆனால் 9 மாதம் ஆகிவிட்ட நிலையில் போலீஸார் புஷ்பாவைக் கண்டுபிடிக்கவில்லை. இதையடுத்து ரேகா தேவி தன் மகளைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று கோரி ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இம்மனு விசாரணைக்கு வந்தபோது போலீஸார் இவ்விவகாரத்தில் கவனக்குறைவாக நடந்து கொண்டது குறித்து நீதிபதிகள் தங்கள் அதிருப்தியை தெரிவித்திருந்தனர். அதோடு டிஜிபி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதன்படி மாவட்ட டிஜிபி நேரில் ஆஜராகி விளக்கம் கொடுத்தார். கோர்ட் தலையிட்டதைத் தொடர்ந்து பெண் காணாமல்போன விவகாரத்தில் ஒரே நாளில் போலீஸார் துப்பு துலக்கினர்.

இவ்வழக்கு குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டது. விசாரணையில் காணாமல் போன பெண் புஷ்பா கொலை செய்யப்பட்டிருந்தார். அவரது உடல் தோண்டி எடுக்கப்பட்டு கொலை செய்த நபரும் கைது செய்யப்பட்டார்.

அதோடு இவ்வழக்கை சரியாக விசாரிக்காமல் குற்றவாளிக்கு சாதகமாக நடந்து கொண்டதாக போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய 28 போலீஸாரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இது குறித்து சிறப்பு விசாரணைக்குழு அதிகாரி கூறுகையில்,” இவ்வழக்கில், விசாரணை அதிகாரிகள் குற்றவாளிக்கு சாதகமாக நடந்து கொண்டுள்ளனர். இவ்வழக்கை பலவீனப்படுத்த குற்றவாளியிடமிருந்து பணம் வாங்கியதோடு மட்டுமல்லாது குற்றவாளியுடன் சேர்ந்து போலீஸ் அதிகாரிகள் பார்ட்டியும் நடத்தியுள்ளனர்.

வழக்கின் ரகசியத்தன்மையில் சமரசம் செய்யப்பட்டது. காவல்துறையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த காரணங்களுக்காகவே அவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்” என்று எஸ்பி கூறினார். சிறப்பு விசாரணைக்குழு தொழில்நுட்ப மற்றும் ஆதாரங்களை முழுமையாக ஆய்வு செய்தது. மொபைல் அழைப்பு விவரப் பதிவுகள் (சிடிஆர்) மற்றும் அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், புஷ்பா மஹ்தோ, தினேஷ் குமார் மஹ்தோவுடன் கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்பில் இருந்தது தெரியவந்தது. சந்தேகத்தின் பேரில், விசாரணைக் குழு, தினேஷைக் காவலில் எடுத்து, அவரை கடுமையான விசாரணைக்கு உட்படுத்தியது.

இதில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். குற்றம் சாட்டப்பட்டவர், அந்தப் பெண் தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்ததாகவும், இதனால் அவருக்கு மன உளைச்சல் ஏற்பட்டதாகவும், இதனால் அவரைக் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டுவதாகவும் தெரிவித்தார். கடந்த ஜூலை 21ம் தேதியன்று புஷ்பா கல்லூரியில் சேர்வதற்காகச் சென்றுள்ளார். அங்கு திட்டமிட்டபடி தினேஷும் அங்கு சென்றான். அங்கிருந்து இருவரும் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு சென்றபோது புஷ்பாவை கத்தியால் குத்திக் கொலைசெய்து புதைத்துள்ளது தெரிய வந்தது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *