தவெக தலைவர் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டிருந்தார். வாக்கு எண்ணிக்கை நிலவரங்கள் வெளியாகிக் கொண்டிருக்கும் சூழலில், விஜய் சுமார் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறார்.
விஜய் எப்படி பெரம்பூரை வென்றார்?

தவெக சார்பில் தேர்தலுக்கு முன்பாக சில மாதங்களாக தொடர்ந்து களத்தில் சர்வேக்களை எடுத்து வந்தனர். அதில் சென்னையில் தவெகவுக்கு நல்ல ஆதரவு இருப்பது தெரிய வரவே கட்சியின் முக்கியஸ்தர்கள் பெரும்பாலானோர் தலைநகரிலேயே களமிறங்கும் முடிவை எடுத்தனர்.
விருகம்பாக்கம் மற்றும் பெரம்பூரில் மக்கள் மத்தியில் தவெகவுக்கு சாதகமான மனநிலை அதிகப்படியாக இருந்ததால், அந்தத் தொகுதியில் எதாவது ஒன்றில் விஜய் போட்டியிட முடிவானது.
முதலில் பெரம்பூரில் ஆதவ் அர்ஜூனா போட்டியிடும் மனநிலையிலேயே இருந்தார். ஆனால், கட்சி கட்டமைப்பு வலுவாக இருக்கும் தொகுதி என்பதாலும் வெற்றி வாய்ப்பு இருக்கும் தொகுதி என்பதால் விஜய்யே இந்தத் தொகுதியில் போட்டியிட முடிவெடுத்தார்.
மேலும், திமுகவின் சிட்டிங் எம்.எல்.ஏவான ஆர்.டி.சேகர் மீதும் தொகுதிக்குள் நல்ல அபிப்ராயம் இருந்திருக்கவில்லை. அவர் தொகுதிக்கு பெரிதாக எதையும் செய்யவில்லை என மக்கள் அதிருப்தி கொண்டிருந்தனர். அதனால்தான் ஆர்.டி.சேகருக்கு ஆதரவாக உதயநிதி பிரசாரம் செய்கையில், கூட்டத்திலிருந்த திமுக ஆதரவாளர் ஒருத்தரே ‘அவர் தொகுதி பக்கம் வந்ததே இல்லைங்க’ என உதயநிதியிடமே கூறியிருந்தார்.

உதயநிதி கொஞ்சம் நகைச்சுவையாக அந்த சங்கடமான தருணத்தை கடந்து போயிருப்பார்.
அதிமுக சார்பில் அவர்கள் நேரடியாக களமிறங்காமல் கூட்டணியான பாமகவுக்கு தொகுதியை கொடுத்ததும் விஜய்க்கு சாதகமான அம்சமாக அமைந்தது. வன்னியர்கள் சொற்ப அளவில் வசிக்கும் பெரம்பூரில் பாமகவுக்கு ஒரு பிடியே கிடைக்கவில்லை. ஆனாலும், பாமக வேட்பாளர் திலகபாமா ரொம்பவே ஆக்டிவாக பிரசாரத்தை செய்திருந்தார்.
மதுக்கடைகளை மையப்படுத்தி போதை ஒழிப்பை மையப்படுத்தி பிரசாரத்தை முன்னெடுத்து சென்றார். ‘விஜய் ஏன் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார்? இரண்டிலும் வெற்றிப் பெற்றால் எந்த தொகுதியை விட்டுக்கொடுப்பார்? அவருக்கு பெரம்பூர் தொகுதி மக்களின் மீது நம்பிக்கை இல்லையா? என லாஜிக்காக விஜய்க்கு எதிராக பிரசாரம் செய்தார்.
பெரம்பூரில் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் என திமுகவின் முக்கியஸ்தர்கள் விஜய்யை நேரடியாக அட்டாக் செய்யவில்லை. ‘உள்ளூர்க்காரர் வேண்டுமா, நாடகம் நடிப்பவர் வேண்டுமா?’ என மேலோட்டமாகவே விமர்சித்தனர். நேரடியாக அட்டாக் செய்தால் மக்கள் மத்தியில் விஜய்க்குதான் செல்வாக்கு கூடும் என்பதால், சில பேச்சாளர்களை வைத்து விஜய்க்கு எதிராக பிரசாரம் செய்திருந்தனர். அதேமாதிரி, தேர்தலுக்கு நெருக்கத்தில் கடைசி 2-3 நாட்களில் பணப்பட்டுவாடாவையும் ஜரூராக நடத்தியிருந்தனர்.

மேலும், விஜய் தொகுதி பக்கமே அதிகமாக வரவில்லை. ஒரே ஒரு நாள் பிரசாரம் செய்து 10 நிமிடம் பேசியிருந்தார். இன்னொரு நாள் இரண்டே இரண்டு வீடுகளுக்கு மட்டும் நேரில் சென்று வாக்கு சேகரித்திருந்தார். அதேமாதிரி, தவெக சார்பில் விஜய்க்காக பிரசாரம் செய்த தொண்டர்களும் விஜய்யின் முகத்தை மட்டுமே முன்வைத்து வீட்டுடுக்கு வீடு பிரசாரம் செய்தனர்.
தொகுதியின் உட்கட்டமைப்புப் பிரச்னைகள், கொடுங்கையூர் குப்பைக் கிடங்கு, போதைப் பொருட்களின் புழக்கம் போன்ற லோக்கல் பிரச்னைகளை தவெகவினர் முன்வைக்க இல்லை. இதெல்லாம் விஜய்க்கு எதிரான அம்சங்களாக பார்க்கப்பட்டது.

இதையெல்லாம் தாண்டி விஜய் ஜெயிக்க முக்கிய காரணம் கட்சியின் கட்டமைப்பே. பெரம்பூரில் மட்டும் கிட்டத்தட்ட 44,000 பேர் கட்சியின் உறுப்பினர்களாக இருக்கின்றனர். 7 வார்டை 14 வட்டங்களாக பிரித்து கடைசி மட்டம் வரைக்கும் நிர்வாகிகளை நியமித்து ஆக்டிவாக வேலை செய்திருந்தனர். மேலும், தொகுதியில் கணிசமாக உள்ள தலித்துகள் மற்றும் கிறிஸ்தவர்களின் வாக்கும் விஜய்க்கு சாதகமாக மாறியிருக்கிறது.
விஜய் மீதான ஈர்ப்புக்கும் நட்சத்திரத்தன்மைக்கும் ஈடாக ஒரு வலுவான போட்டியாளரை இருபெரும் கட்சிகளுமே இறக்காததும் பெரம்பூர் தொகுதியை எளிதில் விஜய் வெல்ல காரணமாக அமைந்தது.
மாநிலம் முழுவதும் விஜய்-க்கு ஆதரவான அமைதியான ஒரு அலை வீசி இருப்பது இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகிறது.!