International
-Nantha Kumar R
டாக்கா: வங்கதேசத்தில் பிரமாண்டமாக அமைய இருந்த 81 அடி உயர ராமர் சிலை கட்டுமானத்து இஸ்லாமிய அமைப்பினர் தடை ஏற்படுத்தி உள்ளனர். இதனால் ஆக்ரோஷமான இந்து அமைப்பினர் தலைநகர் டாக்காவில் நேற்று தீப்பந்து ஏந்தி போராட்டம் நடத்தி 72 மணிநேரம் கெடு விதித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அண்டை நாடான வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசின் போது இந்துக்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்தன. இந்துக்கள் அடித்து கொல்லப்பட்டனர். தற்போது பொதுத்தேர்தல் முடிந்து அங்கு பிஎன்பி கட்சி வென்றது. மறைந்த முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் புதிய பிரதமராகி உள்ளார்.
இருப்பினும் கூட தற்போதும் அங்கு இந்துக்களுக்கு எதிரான சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து வருகிறது. குறிப்பாக ராமர் சிலை அவமதிப்பு உள்ளிட்டவற்றை சில இஸ்லாமிய அமைப்பினர் செய்து வருகின்றனர்.
இதற்கிடையே தான் வங்கதேசத்தின் கைபந்தா மாவட்டத்தில் பலாஷ்பாரி என்ற இடம் உள்ளது. அங்கு கோவில் வளாகத்தில் 81 அடி உயர ராமர் சிலை நிறுவப்பட்டுள்ளது.இந்திய மதிப்பில் ரூ.15.6 கோடி செலவில் இந்த சிலை அமைக்கப்பட்டு வருகிறது. ஸ்ரீ ஸ்ரீ ராதா கோவிந்தா கோவில் குழுவின் தலைவர் ஹரிதாஸ் சந்திர தாஸ் மேற்பார்வையில் பணி நடந்து வந்தது.
சிலையின் கட்டுமான பணி 80 சதவீதம் வரை முடிவடைந்துள்ளது. இன்னும் 20 சதவீத பணிகள் தான் பாக்கி உள்ளது. ஆனால் அந்த சிலையை அமைக்க தற்போது எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் சில இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகள். சிலை வடிவமைப்பு பணியில் ஈடுபடும் நபர்களை மிரட்டி உள்ளனர். சமூக வலைதளங்களில் மிரட்டல் பதிவுகளை செய்து வருகின்றனர். இதனால் தற்போது ராமர் சிலை கட்டுமான பணி நிறுத்தப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி இந்த மாத தொடக்கத்தில் கைபந்தாவில் நடந்த போராட்டத்தில் ராமர் போட்டோக்களுக்கு சிலர் அவமரியாதை செய்தனர். இந்த தொடர் சம்பவங்களுக்கு இந்து அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தான் ரங்க்பூரில் ராமர் சிலை கட்டுமான பணியை மீண்டும் தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தியும், அதனை எதிர்க்கும் இஸ்லாமிய அமைப்பினரை கண்டித்தும் நேற்று இரவில் தலைநகர் டாக்காவில் ஆயிரக்கணக்கான இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் ராமர் சிலை அவமதிக்கப்பட்டதில் இப்போது போலீஸ் சார்பில் வழக்கு மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. இதனால் நேற்று பல்வேறு இந்து அமைப்புகளும், மாணவர்களும் டாக்காவின் ஷாபாக் சந்திப்பில் ஒன்று திரண்டு தேசிய பத்திரிகையாளர் மன்றம் நோக்கி பேரணியாகச் சென்றனர். ‘இந்து மஹாஜோத்’ அமைப்பு இந்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து அனைவரையும் ஒருங்கிணைப்பு செய்தது. அதன்பிறகு மனித சங்கிலி போராட்டம் நடத்தப்பட்டது. ‘ஜெய்ஸ்ரீ ராம்’ என்று கோஷமிட்டனர். ராமர் சிலை கட்டுமானத்தை தடுக்கும் நபர்களை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கூறினர்.
அதேபோல் இன்னொரு பிரிவினர் டாக்காவில் உள்ள செய்தியாளர் சங்கம் முன்பு போராட்டம் நடத்தினர். அப்போது அவர்களை போலீசார் கைது செய்ய முயன்றனர். இதனால் லேசான தள்ளுமுள்ளு நடந்தது. கடவுள் ராமர் அவமதிப்பு வழக்கில் பிரதமர் தாரிக் ரஹ்மான் தலைமையிலான பிஎன்பி அரசு மெத்தனமாக செயல்படுவதாக குற்றம்சாட்டினர். இன்னும் 72 மணிநேரத்தில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும். இல்லாவிட்டால் போராட்டம் இன்னும் தீவிரப்படுத்தப்படும் என்று கெடு விதித்தனர். இந்த சம்பவங்களால் வங்கதேச தலைநகர் டாக்காவில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.