"பெரும்பான்மையைச் சட்டமன்றத்தில்தான் நிரூபிக்க வேண்டும், ராஜ் பவனில் அல்ல!" – கமல்ஹாசன் காட்டம்

Spread the love

திமுக, அதிமுகவை விட, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருந்தாலும், ஆட்சி அமைக்கப் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

ஆதரவு கோரி, தவெக, விசிக உள்ளிட்ட சில கட்சிகளுக்குக் கடிதமும் அனுப்பியிருக்கிறது. நேற்றைய தினம், தவெகவிற்கு ஆதரவு தெரிவிப்பதாகக் காங்கிரஸ் அறிவித்தது.

இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்திற்குப் பெரும்பான்மை கிடைக்காததால், ஆட்சி அமைக்க ஆளுநர் முட்டுக்கட்டைப் போடுகிறார். பெரும்பான்மையை நிரூபித்தால் மட்டுமே ஆட்சி அமைக்க அழைப்பேன் என ஆளுநர் முரண்டு பிடிப்பதற்கும் பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

விமான நிலையத்தில் விஜய்
விமான நிலையத்தில் விஜய்

மநீம தலைவர் கமல்ஹாசனும் தன்னுடைய கண்டனங்களைத் தெரிவித்து அவருடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அதில், “தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தனித்து ஆட்சியமைக்கும் அதிகாரத்தை மக்கள் எந்தக் கட்சிக்கும் வழங்கவில்லை.

இந்த முடிவு தமிழ்நாட்டு வரலாற்றில் முன்னெப்போதும் நிகழாதது. என் சகோதரர் ஸ்டாலின் ‘மக்கள் தீர்ப்பை மதிக்கிறோம்; பொறுப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம்’ என்று அறிவித்திருக்கிறார்.

அவரது அரசியல் முதிர்ச்சியை நான் மதிக்கிறேன். இப்போது அரசியலமைப்புப் பொறுப்பில் இருப்பவர்களும் அதே கடமையை நிறைவேற்ற வேண்டும்.

இது கோரிக்கை அல்ல, அவர்களின் அரசியலமைப்புக் கடமைக்கான நினைவூட்டல். விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வென்றுள்ளது.

அவரை ஆட்சியமைக்க அழைக்காமல் இருப்பது தமிழ்நாட்டு மக்களின் ஆணையை அவமதிப்பதாகும். 233 தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இன்னும் பதவியேற்க முடியாமல் இருக்கிறார்கள்.

இது மாநிலத்திற்கு நேரும் அவமானம். மக்களாட்சிக்கு ஏற்படும் சேதம். ‘பெரும்பான்மையைச் சட்டமன்றத்தில்தான் நிரூபிக்க வேண்டும், ராஜ் பவனில் அல்ல’ என எஸ்.ஆர். பொம்மை வழக்கில் உச்ச நீதிமன்றம் தெளிவாகச் சொல்லியிருக்கிறது.

நான் பேசிக்கொண்டிருப்பது கட்சி அரசியல் அல்ல. ஓர் இந்தியக் குடிமகனின் கொள்கைக் குரல் இது. தமிழ்நாட்டு மக்களின் தீர்ப்புக்கு மரியாதை கிடைத்தே ஆக வேண்டும்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *