பேட்மிண்டன் நிதி நெருக்கடி: SAI-ஐ விளாசிய PV Sindhu!

Spread the love

ஒரு சர்வதேசப் போட்டிக்குத் தயாராகும் பேட்மிண்டன் வீரரின் மனதில், “அடுத்த ஷாட்டை எப்படி அடிப்பது?” என்ற எண்ணம்தான் ஓட வேண்டும். “அடுத்த ஃபிளைட் டிக்கெட்டுக்கும், ஹோட்டல் அறைக்கும் யாரிடம் கடன் வாங்குவது?” என்ற கவலை ஓடக்கூடாது. ஆனால், இந்திய பேட்மிண்டன் வீரர்கள் இன்று சந்தித்துக்கொண்டிருப்பது அந்த அவலத்தைத்தான். சமீபத்தில் நடந்து முடிந்த ஐரோப்பிய சுற்றுப்பயணத்தில், இந்திய வீரர்களுக்குக் கடைசி நேரத்தில் நிதி உதவியை நிறுத்தியது இந்திய விளையாட்டு ஆணையம் (SAI). ஒலிம்பிக் பதக்க நாயகி பி.வி. சிந்து தொடங்கி, லக்சயா சென் வரை பலரும் சொந்தப் பணத்தைச் செலவழித்து விளையாடும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். பணமில்லாததால் பல இளம் வீரர்கள் தொடரிலிருந்தே விலகினர்; சிலர் பயிற்சியாளர்கள்கூட இல்லாமல் தனிமரமாகக் களமிறங்கியுள்ளனர்.

பி.வி. சிந்து

பி.வி. சிந்து

இந்த விவகாரம் பூதாகரமான நிலையில், “சர்வதேச வீரர்கள் ஏன் அரசாங்கக் காசை எதிர்பார்க்கிறார்கள்?” என சமூக வலைதளங்களில் சிலர் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளித்த பி.வி. சிந்து, டென்னிஸ் விளையாட்டை உதாரணம் காட்டி விளையாட்டு நிர்வாகத்தின் முகத்திரையைக் கிழித்துள்ளார்.

“டென்னிஸ் மற்றும் பேட்மிண்டன் ஆகிய இரண்டு விளையாட்டுகளுக்கும் வெளிநாட்டுப் பயணம், தங்குமிடம், பிசியோதெரபிஸ்ட் என ஒரே மாதிரியான செலவுதான் ஆகிறது. ஆனால், வருமானம்? டென்னிஸில் விம்பிள்டன் தொடரின் முதல் சுற்றில் தோற்று வெளியேறினாலே இந்திய மதிப்பில் சுமார் 85 லட்ச ரூபாய்க்கும் மேல் பரிசுத் தொகை கிடைக்கும். ஆனால், பேட்மிண்டனின் மிக உயரிய தொடரான சைனா ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றாலே மொத்தமாகச் சுமார் 1 கோடியே 10 லட்ச ரூபாய்தான் கிடைக்கும். முதல் சுற்றில் தோற்றால் வெறும் சொற்பத் தொகையே மிஞ்சும். என்னைப் போன்ற மூத்த வீரர்களுக்கு ஸ்பான்சர்கள் இருப்பதால் சமாளித்துவிட முடியும்.ஆனால், எந்தப் பின்புலமும் இல்லாத 18 வயது இளம் வீரர்கள், அரசாங்கத்தின் உதவி இல்லாமல் எப்படி வெளிநாடுகளுக்குச் சென்று விளையாடுவார்கள்? அடுத்த சிந்துவும், லக்சயாவும் எப்படி உருவாவார்கள்?”

என அவர் எழுப்பிய கேள்வி, ஒட்டுமொத்த இந்திய விளையாட்டு நிர்வாகத்தையும் நோக்கி வீசப்பட்ட கூர்மையான ஈட்டி!

பேட்மிண்டன்

பேட்மிண்டன்

மூலப் பிரச்சனை எங்கே இருக்கிறது?

வெளிநாட்டுப் போட்டிகளுக்கான நிதி கோரிக்கையை 30 நாட்களுக்கு முன்பே சமர்ப்பிக்க வேண்டும் என்பது விதி. இந்திய பேட்மிண்டன் சங்கம் (BAI) தாமதமாக விண்ணப்பித்ததாக SAI கைவிரிக்கிறது. ஆனால், தொடர்களின் அட்டவணை மற்றும் வீரர்களின் தகுதிப் பட்டியல் இறுதியாவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களை BAI காரணமாகக் காட்டுகிறது. இந்த இரண்டு அமைப்புகளுக்கும் இடையிலான கடிதப் பரிமாற்ற தாமதத்திற்கு, களத்தில் வியர்வை சிந்தும் வீரர்கள் பலிகடா ஆக்கப்பட்டுள்ளனர்.

கிரிக்கெட்டிற்குக் கொட்டிக் கொடுக்கும் கார்ப்பரேட் உலகமும், விளம்பர நிறுவனங்களும் மற்ற விளையாட்டுகளைத் திரும்பிக்கூடப் பார்ப்பதில்லை. எனவே, ஒலிம்பிக் போன்ற சர்வதேச அரங்கில் இந்தியாவின் கொடியைப் பறக்கவிடும் பேட்மிண்டன், தடகளம் போன்ற விளையாட்டுகளுக்கு அரசாங்கத்தின் நிதிதான் உயிர்நாடி. அதிலும் கைவைப்பது, வளரும் பயிரின் வேரில் வெந்நீர் ஊற்றுவதற்குச் சமம்.

Badminton association of india

Badminton association of india

ஒரு நாடு விளையாட்டில் வல்லரசாக மாற வேண்டுமென்றால், பதக்கம் வென்ற பிறகு வீரர்களுக்கு மாலை போட்டு, கோடிகளில் பரிசு அறிவிப்பதில் மட்டும் அர்த்தமில்லை. அவர்கள் அந்தப் பதக்கத்தை வெல்வதற்கு முன்பு, களத்தில் போராடிக்கொண்டிருக்கும்போது கைகொடுத்துத் தூக்கிவிடுவதுதான் உண்மையான ஊக்கம். நிர்வாகக் காரணங்களுக்காக வீரர்களின் பயணம் ஒருபோதும் தடைபடக் கூடாது. தாமதமான விண்ணப்பங்களைக் காரணம் காட்டி நிதியை நிறுத்தாமல், வீரர்களின் பயணத்தை உறுதி செய்துவிட வேண்டும்.

அதேபோல, “டார்கெட் ஒலிம்பிக் போடியம் திட்டம்’ (TOPS) என்பது வெறும் நட்சத்திர வீரர்களுக்கானதாக மட்டும் சுருங்கிவிடாமல், வளர்ந்து வரும் இளம் திறமையாளர்களின் வெளிநாட்டுப் பயணச் செலவுகளை முழுமையாக ஏற்கும் வகையில் விரிவுபடுத்தப்பட வேண்டும். யாருடைய தவறால் நிதி நிறுத்தப்பட்டதோ, அந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமே தவிர, அதற்கான தண்டனையை வீரர்கள் அனுபவிக்கக் கூடாது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *