நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் பொதுத்தேர்வுகளில் முறைகேடுகளைத் தடுக்கும் பொதுத்தேர்வுகள் (முறைகேடுகள் தடுப்பு) திருத்த மசோதா மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு முன்பு மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தொடரின் போது நீட் வினாத்தாள் கசிவு, டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்கள் நடத்திய போராட்டம், மாணவர்களிடம் போலீசார் நடந்துகொண்ட விதம் மற்றும் மேகதாது விவகாரம் குறித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அவை பலமுறை ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர் அவை கூடியபோது மத்திய புவி அறிவியல் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் மசோதாவை மாநிலங்களவையில் தாக்கல் செய்தார். எதிர்க்கட்சிகளின் இடையூறுகளுக்கு மத்தியில் 10 மணி நேர விவாதத்திற்குப் பிறகு இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
மசோதாவின்படி, வினாத்தாள் கசிவில் ஈடுபடும் தனிநபர்களுக்கு ரூ.50 லட்சம் அபராதம் மற்றும் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும். மேலும், முறைகேட்டில் தொடர்புடைய அமைப்புகளுக்கு ரூ.10 கோடி வரை அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மசோதா தொடர்பான விவாதம் மாநிலங்களவையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

