வரலாற்றுச் சிறப்புமிக்க புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக பழைய பேருந்து நிலையத்தில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் தற்காலிகமாகப் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுச் செயல்பட்டு வருகிறது.
சென்னை, சிதம்பரம், சேலம்,தெற்கே இராம்நாடு, மேற்கே திருப்பூர், கோயம்புத்தூர் எனப் பல்வேறு மாவட்டங்களை இணைக்கும் முக்கியப் புள்ளியாக இந்தப் பேருந்து நிலையம் செயல்படுவதால், தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு வந்து செல்கின்றனர்.

மக்கள் நடமாட்டம் மிகுந்த இந்த பஸ் ஸ்டாண்ட், தற்போது சாக்கடைக் குளமாக உருமாறி வருகிறது. பேருந்து நிலையத்தின் வலது மற்றும் இடதுபுறம் என இரண்டு பக்கங்களிலும் கழிவுநீர் பெருக்கெடுத்து நிற்கிறது.
சாக்கடை கால்வாய் முழுவதும் வீசப்பட்ட பழைய ஃப்ரிட்ஜ் அட்டைகள், பாட்டில்கள்,பிளாஸ்டிக் குப்பைகள் என அடைத்துக் கிடக்கின்றன.
தற்போது மழைக்காலம் என்பதால், நிலைமை இன்னும் மோசமாகி கழிவுநீர் வெளியே செல்ல வழியின்றி நிரம்பி வழிகிறது. இதனால் பஸ் ஸ்டாண்ட் முழுவதும் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது.

தேங்கி நிற்கும் இந்த கழிவுநீரால் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி மொய்ப்பதால், பேருந்துக்காகக் காத்திருக்கும் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், சுற்றியுள்ள கடைக்காரர்களுக்கும், அப்பகுதி மக்களுக்கும் காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு தொற்றுநோய்கள் வேகமாகப் பரவி வருகிறது.