போராட்டங்களால் தடுமாறும் தவெக மேலிடம்? புலம்பும் உளவுத்துறை; திணறும் போலீஸ்

Spread the love

தலைநகரான சென்னையில் போராட்டங்களுக்கு அனுமதி கொடுக்கும் விவகாரங்களில் தவெக அரசின் ‘மேலிடம்’ தடுமாறுவதால் உளவுத்துறையினரும் போலீஸாரும் போராட்டங்களை முறையாக கையாள முடியாமல் திணறுவதாகக் கிசுகிசுக்கின்றனர்.

SIR போராட்டம்
SIR போராட்டம்

சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே SIR-க்கு எதிராகவும் தலைமைத் தேர்தல் ஞானேஷ் குமாருக்கு எதிராகவும் இடதுசாரி மாணவ அமைப்பினர் நேற்று மாலை போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

24 மணி நேரம் தொடர்ந்து போராட வேண்டுமென போராட்டக் குழுவினர் காவல்துறையினரிடம் அனுமதி கேட்டிருந்தனர். ஆனால், காவல்துறை சில காரணங்களைக் குறிப்பிட்டு அந்த 24 மணி நேர போராட்டத்துக்கு அனுமதி மறுத்தது. நேற்று மாலை தடையை மீறி மாணவ அமைப்பினர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே கூடினர்.

காவல்துறையினரும் முன்னெச்சரிக்கையாகக் குவிக்கப்பட்டிருந்தனர். மாலை 4 மணிக்கு ஸ்பாட்டில் கூட தொடங்கிய மாணவ அமைப்பினர் இரவு 8 மணி வரைக்கும் போராடிவிட்டு, பின்னர் காவல்துறையின் அறிவுறுத்தலின் பேரில் கைதாகி சென்றனர்.

SIR போராட்டம்
SIR போராட்டம்

கைது செய்யப்பட்டு அடைத்து வைக்கப்பட்டிருக்கும் மண்டபங்களில் தொடர்து போராடியும் வருகின்றனர்.

இந்த விவகாரத்தின் போதுதான் போராட்டங்களுக்கு அனுமதி கொடுப்பதில் தவெகவின் ‘மேலிடம்’ நிலையான முடிவை எடுக்காமல் தடுமாறுவதாகவும் அதனால் களத்தில் காவல்துறை இந்தப் போராட்டங்களைக் கையாள்வதில் சிரமம் ஏற்படுவதாக புலம்புகின்றனர்.

நம்மிடம் பேசிய சில சென்னை மாநகர காவல் அதிகாரிகளும் உளவுத்துறையினரும், ”ஒவ்வொரு போராட்டக் குழுவுக்கும் ஒவ்வொரு தன்மை இருக்கிறது. சிலர் அனுமதி கொடுத்த நேரத்துக்குள் எந்தச் சச்சரவும் இல்லாமல் போராடிவிட்டு கலைந்துவிடுவார்கள். சிலர் அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டியும் விடாப்பிடியாகப் போராடி சிக்கலைக் கொடுப்பார்கள். உளவுத்துறையின் ரிப்போர்ட்படி போராட அனுமதி கேட்பவர்களுக்குச் சில நிபந்தனைகளோடு அனுமதி கொடுப்போம்.

இடதுசாரி மாணவ அமைப்பினர் சமீபத்தில்தான் பாலன் இல்லத்திலும் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகேயும் நீட்டுக்கு எதிராகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இப்போதைய அரசை நோக்கி கடுமையான விமர்சனங்களையும் அப்போது முன்வைத்தனர். அதனால் அவர்களின் 24 மணி நேர தொடர் போராட்டத்துக்கு நாங்கள் அனுமதி கொடுக்கவில்லை.

இரவு நேரங்களில் போராடுவதற்கு அனுமதி கொடுப்பதில்லை எனக் கூறி மறுத்தோம். ஆனால், அவர்கள் தடையை மீறி போராடுவோம் என்றனர். இப்படியான தருணங்களில் போராட்டக்காரர்களை ஸ்பாட்டில் கூட விடாமல் தடுப்புகளை ஏற்படுத்தி அப்புறப்படுத்தி விடுவோம். இல்லையெனில் கூட்டம் ஏறுவதற்குள் கைது செய்து நிலைமையைச் சீராக்கிவிடுவோம். ஆனால், இடதுசாரிகளின் போராட்டங்களை வழக்கம் போல கையாள்வதில் அரசின் ‘மேலிடம்’ கொஞ்சம் தயக்கம் காட்டுகிறது.

மேலிருந்து உத்தரவு வரும் வரை எதுவும் செய்ய வேண்டாம் என்கின்றனர். அதற்குள் போராட்டக்காரர்கள் முழுமையாகக் கூடி விடுகிறார்கள். காவல்துறைக்கு அவர்களைக் கலைப்பதும் பெரும் சிரமமாகிவிடுகிறது. செவிலியர்கள் போராட்டம், நீட் போராட்டம், ஞானேஷ் குமாருக்கு எதிரான போராட்டம் என முக்கியமான போராட்டங்களிலெல்லாம் முடிவெடுக்க அரசின் மேலிடம் தாமதப்படுத்தி தயங்குகிறது.

ஆட்சியமைந்த முதல் 6 மாதத்துக்குள்ளேயே 2016-21 காலக்கட்டத்தை நினைவுப்படுத்தும் வகையில் தொடர் போராட்டங்கள் நடக்க தொடங்கிவிட்டன” என்கின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *