மக்களின் பணத்துக்குப் பாதுகாப்புத் தருவது யார் பொறுப்பு?

Spread the love

டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையில் இந்தியா உலகத்துக்கே முன்மாதிரியாக இருக்கிறது. கையில் பணமே எடுத்துச்செல்லத் தேவையில்லாத அளவுக்கு கிராமப்புறங்களில்கூட மாற்றம் வந்துவிட்டது. ஆனால், அதேவேகத்துக்கு டிஜிட்டல் மோசடிகளும் வளர்ந்துகொண்டிருக்கிறது. என்னதான் தொழில்நுட்பங்கள் வளர்ந்தாலும் வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்துக்கே உத்தரவாதம் இல்லாத நிலை உருவாகியிருப்பது கவலையளிக்கிறது.

இந்தியாவில் சைபர் மோசடிகளின் தீவிரத்தைப் புரிந்துகொள்ள மத்திய அரசின் புள்ளிவிவரங்களே சாட்சி. 2021 முதல் 2025 வரை தேசிய சைபர் குற்றப் புகார் இணையதளத்தில், 65.89 லட்சத்துக்கும் அதிகமான நிதி மோசடிப் புகார்கள் பதிவாகியுள்ளன. இவற்றின் மூலம் பொதுமக்கள் இழந்ததாகக் கூறப்படும் தொகை ரூ.55,050 கோடிக்கும் அதிகம். 2025-ல் மட்டும் 24 லட்சத்துக்கும் அதிகமான புகார்கள் பதிவாகியுள்ளன; இழப்புத் தொகை சுமார் ரூ.22,495 கோடி. வங்கிகளின் கண்காணிப்புக் குறைபாட்டாலும் அலட்சியத்தாலும் டிஜிட்டல் மோசடிகள் நடந்து வாடிக்கையாளர்கள் பணத்தை இழக்க நேரிட்டால், இழந்த தொகையை வங்கிகளே இழப்பீடாக வழங்க வேண்டும் என்று சமீபத்தில் உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

சேவைகளுக்கும், பரிவர்த்தனைகளுக்கும் வாடிக்கையாளர்களிடமிருந்து கட்டணம் வசூலிக்கும் வங்கிகள், அவர்களின் பணத்தைப் பாதுகாப்பதற்கும் அதே அறத்தோடு பொறுப்பேற்க வேண்டும். வழக்கத்துக்கு மாறான பணப் பரிமாற்றங்களைக் கண்டறியும் செயற்கை நுண்ணறிவு கண்காணிப்பு, சந்தேகத்துக்குரிய கணக்குகளை உடனடியாக முடக்கும் வசதி, 24 மணி நேரப் புகார் உதவி, விரைவான பண மீட்பு நடவடிக்கை என வங்கிகள் இன்னும் நிறைய செய்யவேண்டியிருக்கிறது.

டிஜிட்டல் மோசடிகளை அரசும் ரிசர்வ் வங்கியும் வெறும் தொழில்நுட்பக் குற்றமாக மட்டுமே பார்க்கக்கூடாது. வங்கிகளுக்கான விதிமுறைகளை வலுப்படுத்துவதோடு, பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவான இழப்பீடு, மோசடிப் பணத்தை மீட்பதற்கான ஒருங்கிணைந்த நடவடிக்கை ஆகியவற்றை உறுதிப்படுத்த வேண்டும். சைபர் குற்ற விசாரணைக்குத் தேவையான காவல்துறைத் திறனையும் தொழில்நுட்ப வசதிகளையும் அதிகரிக்க வேண்டும்.

டிஜிட்டல் இந்தியா என்பது பணப் பரிவர்த்தனைகளை வேகப்படுத்துவது மட்டுமல்ல; மக்களின் பணத்தையும் நம்பிக்கையையும் பாதுகாப்பதும்தான். வங்கிகளின் லாபத்துக்கும் டிஜிட்டல் பரிவர்த்தனை வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் அரசு, மக்களின் பணத்துக்கான பாதுகாப்புக்கும் அதேயளவுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு அவசியம்தான். ஆனால், மக்களின் விழிப்புணர்வு குறைபாட்டை காரணம் காட்டி வங்கிகளும், அரசு மற்றும் ரிசர்வ் வங்கியும் பொறுப்புகளைத் தட்டிக்கழிக்க கூடாது.

மக்கள் வங்கிகளை நம்பிப் பணத்தை ஒப்படைக்கிறார்கள். அந்த நம்பிக்கையைப் பாதுகாப்பது வங்கிகளின் கடமை; அதை உறுதிப்படுத்துவது அரசின் பொறுப்பு.

– ஆசிரியர்

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *