மக்களே அலர்ட்… மீண்டும் சரிந்த தங்கத்தின் விலை! – Kumudam

Spread the love

விலை உச்சத்தால் எட்டாக்கனியாக இருந்து வந்த தங்கத்தின் விலை, அண்மைக்காலமாக ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகிறது.

ஒரு சவரன் தங்கம் ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில், அதன் விலை வேகமாகச் சரிந்து ஒரு லட்சம் ரூபாய்க்கும் கீழே சென்றது.

இந்த மாதத்தின் மத்தியில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ஒரு லட்சம் ரூபாய்க்கும் கீழ் விற்பனை செய்யப்பட்டது.

கடந்த நவம்பர் 21, 22 ஆகிய தேதிகளில் ஒரு சவரன் தங்கம் ரூ.91,728-க்கும், ஒரு கிராம் ரூ.11,716-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த எதிர்பாராத விலைச் சரிவு நகைப்பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

குறிப்பாக, நடுத்தரக் குடும்பத்தினர் மற்றும் திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்களை ஏற்பாடு செய்திருந்தவர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். தங்க நகைகளை வாங்க ஆர்வம் காட்டிய மக்கள், நகைக்கடைகளிலும் குவிந்தனர்.

இந்த நிலையில், மீண்டும் தங்கத்தின் விலை உயரத் தொடங்கியது மக்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. கடந்த 23-ஆம் தேதி முதல் படிப்படியாக உயர்ந்த தங்கத்தின் விலை, சவரனுக்கு சுமார் ரூ.2,000 வரை அதிகரித்தது.

ஆனால், தற்போது இதற்கு நேர்மாறாகத் தங்கத்தின் விலை இன்று அதிரடியாகச் சரிந்துள்ளது.

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,360 குறைந்து ரூ.91,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு கிராமுக்கு ரூ.295 குறைந்து ரூ.11,420-க்கு விற்பனையாகிறது. இந்த விலைச் சரிவு நகைப்பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சர்வதேச அளவில் நிலவும் வர்த்தகச் சூழல், பொருளாதார மாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளே தங்கத்தின் விலையை நிர்ணயிக்கின்றன. தங்கம் விலை உயர்ந்த பொருளாக இருந்தாலும், இந்தியாவில் குறிப்பாகத் தமிழ்நாட்டில் மக்களின் வாழ்வில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

சுபகாரியங்கள், நடுத்தரக் குடும்பத்தினரின் சேமிப்பு, அவசரத் தேவைகளுக்குக் கடன் பெறுவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்குத் தங்கம் முக்கியப் பங்கு வகிக்கிறது. இதனால், தங்கத்தின் விலை மாற்றம் நாள்தோறும் மக்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது.

இந்த நிலையில், இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,360 குறைந்திருப்பது நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், வரும் நாட்களில் தங்கத்தின் விலை மீண்டும் உயருமா அல்லது தொடர்ந்து சரியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

வரும் நாட்களில் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும், பெரிய அளவில் விலை உயர்வு இருக்காது எனப் பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே, தங்க நகைகளை வாங்கவும், சேமிக்கவும் திட்டமிட்டிருப்பவர்கள் தற்போதைய விலை நிலவரத்தைக் கருத்தில் கொண்டு முடிவெடுக்கலாம்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *