அதேபோல், BNSS பிரிவு 56, காவலில் உள்ள நபரின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பைப் பாதுகாப்பது காவலில் வைக்கும் அதிகாரியின் கடமை என்பதை வலியுறுத்துகிறது.
மேலும், BNSS பிரிவு 53-ன் கீழ், கைது செய்யப்பட்ட நபருக்கு மருத்துவப் பரிசோதனை தொடர்பான சட்டப் பாதுகாப்பும் உள்ளது. கைது செய்யப்பட்ட நபரின் உடலில் காயங்கள் அல்லது வன்முறையின் தடயங்கள் இருந்தால், அவை பதிவு செய்யப்படுவதும் முக்கியமான பாதுகாப்பாகும்.
நீதிமன்றம் என்ன சொல்கிறது?
D.K. Basu v. State of West Bengal (1997) 1 SCC 416 என்ற முக்கியமான வழக்கில், கைது மற்றும் காவலில் இருப்பவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க உச்ச நீதிமன்றம் பல முக்கியமான வழிகாட்டுதல்களை வழங்கியது.
அதன்படி, அரெஸ்ட் மெமோ (Arrest Memo) தயாரித்தல், காவல் அதிகாரிகளின் அடையாளத்தைத் தெளிவாகக் காட்டுதல், உறவினர் அல்லது நண்பருக்குத் தகவல் தெரிவிப்பது, மருத்துவப் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இந்தப் பாதுகாப்புகளில் பல தற்போது BNSS-ல் சட்டப்பூர்வமாகவும் இடம்பெற்றுள்ளன
இந்த வழிகாட்டுதல்களின் நோக்கம், கைது செய்யப்பட்ட நபரின் அடிப்படை உரிமைகள் மற்றும் மனித கண்ணியம் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதே.
நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியது…
கைது என்பது ஒரு நபரின் சுதந்திரத்தைத் தற்காலிகமாகக் கட்டுப்படுத்தலாம்… ஆனால், அவருடைய அடிப்படை மற்றும் சட்டப்பூர்வ உரிமைகளைப் பறித்துவிடாது .
அந்த உரிமைகள் என்ன என்பதை அறிந்திருப்பதே ஒவ்வொருவருக்கும் அவசியமான சட்ட விழிப்புணர்வு!