புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி ஊராட்சி ஒன்றியம், காரக்கோட்டை ஊராட்சி, திருவள்ளுவர் நகரில் சுமார் 30 ஆதிதிராவிடர் குடும்பங்கள் தலைமுறை தலைமுறையாக வசித்து வருகின்றன. இப்பகுதியில் வசிக்கும் மக்கள் தங்கள் குடும்பங்களில் யாரேனும் இறந்துவிட்டால், உடலை அடக்கம் செய்யச் சரியான மயான வசதியோ அல்லது மயானத்திற்குச் செல்ல பாதையோ இல்லாமல் பல ஆண்டுகளாக கடும் வேதனையைச் சந்தித்து வந்தனர்.
இப்பிரச்னைக்கு உடனடி அரசியல் சாசன அடிப்படையிலான தீர்வு வேண்டி, “நீலம் பண்பாட்டு மையத்தின்’ புதுக்கோட்டை மாவட்ட அமைப்பாளர் முருகானந்தம் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் (20-07-2026, மனு எண்: 632) மனு அளித்தார். அத்துடன் இந்த மனுவினை அறந்தாங்கி தொகுதி எம்.எல்.ஏவும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சருமான முகமது பர்வேஸின் கவனத்துக்கும் கொண்டு சென்றனர்.

அது பற்றி நீலம் பண்பாட்டு மையத்தின் முருகானந்தத்திடம் பேசினோம்.
“திருவள்ளுவர் நகரில் 30 ஆதிதிராவிடக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகிறார்கள். அங்கே இறப்பவர்களின் உடலை அடக்கம் செய்ய நீர் தேங்கிய வாய்க்காலில் குழி தோண்டும் வீடியோ பதிவு எனக்குக் கிடைத்தது. அந்த வீடியோவை உடனடியாகப் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர், தொகுதி அமைச்சர் மற்றும் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்தேன்.
அதன்பின், திங்கள்கிழமை நடைபெற்ற மாவட்ட ஆட்சியரின் மனுநீதி முகாமில் நேரில் சென்று மனு கொடுத்தேன் (மனு எண்: 1404). மனுவைப் பார்த்த ஆட்சியர் மேடம், கூட்டத்திற்கு வந்திருந்த மணமேல்குடி வட்டாட்சியரை நேரில் கூப்பிட்டு மனுவைக் கொடுத்து உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.