மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
கடந்த சில தினங்களாகவே தமிழ்நாடு முழுக்க கவனம் ஈர்த்த ஊர்கள் இவை என்றால் மிகையில்லை.
இந்த இரண்டு தொகுதிகளில் மதுராந்தகத்தில் போட்டியிடும் முக்கியக் கட்சிகளின் வேட்பாளர்கள் அனைவருமே அந்தத் தொகுதியைச் சார்ந்தவர்கள் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கடந்த வாரம் த.வெ.க-வின் தேர்தல் பிரசார மேடையில் பேசிய காங்கிரஸ் கட்சி எம்.பி விஷ்ணு பிரசாத், “மதுராந்தகம் என்றால் நினைவுக்கு வருவது மூன்று விஷயங்கள். முதலில் மதுராந்தகம் ஏரி. இரண்டாவது இங்குள்ள ஏரி காத்த ராமர் ஆலயம். மூன்றாவது மதுராந்தகம் ஆறுமுகம்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
ஏரியும் ஏரி காத்த ராமரும் எல்லாருக்கும் தெரியும்.
மதுராந்தகம் ஆறுமுகம் குறித்து இப்போதைய தலைமுறையில் எத்தனை பேருக்குத் தெரியும்?
மதுராந்தகத்தை நன்கு அறிந்தவரும் அவருடன் அரசியலில் பயணித்தவருமான கே.எஸ்.ராதாகிருஷ்ணனிடம் பேசினோம்.

“திமுகவின் முகமா இருந்தவர் பத்தி தவெக மேடையில பேசியிருக்காங்க” என்றவர், ஆறுமுகம் குறித்த நினைவுகளைப் பகிரத் தொடங்கினார்.
“‘திமுக-வில் கலைஞர், பேராசிரியர், ஆற்காட்டாருக்குப் பிறகு இரண்டாவது வரிசைத் தலைவர்கள்னு ஒரு வரிசை இருக்கும். வீரபாண்டி ஆறுமுகம், கோ.சி மணி உள்ளிட்ட சிலர் இந்த வரிசையில் இருந்தாங்க. இவங்க தத்தமது ஏரியாவுலயும் பெரிய செல்வாக்கோட இருப்பாங்க. அதேபோல கலைஞரும் எந்தவொரு விஷயம்னாலும் இவங்ககிட்டயும் நேரடியாப் பேசி கருத்துக் கேட்பார். இந்த வரிசையில இருந்தவர்தான் மதுராந்தகம் ஆறுமுகம். மதுராந்தகத்தார்னு கூப்பிடுவாங்க. முரசொலியில மாவீரர் மதுராந்தகத்தார்னெல்லாம்கூட எழுதுவாங்க.