மதுரையில் சிங்கப்பெண் சிறப்புப் படையின் முதல் வழக்கு; மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது

Spread the love

மதுரை மாநகர் தெற்குவாசல் பகுதியில் நேற்று பள்ளிக்குச் சென்றுவிட்டு வீட்டுக்குச் செல்வதற்காக பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த 12 ஆம் வகுப்பு பள்ளி  மாணவிக்கு அவ்வழியாக வந்த ஷேர் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக மதுரை மாநகர சிங்கப்பெண் சிறப்பு படையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து  சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சிங்கப்பெண் சிறப்புப் படை பெண் உதவி ஆய்வாளர் தனபாக்கியலட்சுமி, பெண் தலைமை காவலர்கள் தேன்மொழி மற்றும் தமிழரசி ஆகியோர் பாதிக்கப்பட்ட மாணவியைத் தனியாக அழைத்து விபரங்களைக் கேட்டறிந்தனர்

பின்னர் மாணவியின் தந்தைக்குத் தகவல் தெரிவித்த பின்னர் தந்தை அளித்த புகாரின் பேரில் மதுரை மாநகர தெற்கு அனைத்து மகளிர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இதையடுத்து சிங்கப்பெண் சிறப்பு படையினர் உதவியுடன் அனைத்து மகளிர் காவல்துறையினர் குற்றம் நடைபெற்ற இடம் மற்றும் அருகில் உள்ள ஆட்டோ ஸ்டாண்ட் ஆகிய இடங்களில் தீவிர விசாரணையை நடத்தினர்

பாலியல் தொல்லை
பாலியல் தொல்லை

அதனடிப்படையில் மாணவிக்குப் பாலியல் தொல்லை அளித்த மதுரை மாவட்டம் பனைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த ஷேர் ஆட்டோ ஓட்டுனரான முகமது இப்ராஹிம் (65) மற்றும் காவல்துறை விசாரணையின் போது உண்மையை மறைத்து எதிரிக்கு உதவியாக இருந்த மதுரை ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்த ஷேர் ஆட்டோ ஓட்டுநரான அப்பாஸ் (55) ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

பின்னர் இருவரையும் நீதிமன்றக் காவலில் அடைக்க உத்தரவிட்ட நிலையில் இருவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

பாதிக்கப்பட்ட மாணவியை விசாரணை செய்து உடனடியாக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று புகார் அளித்தும் மற்றும் சம்பவத்தில் ஈடுபட்ட ஷேர் ஆட்டோ ஓட்டுநர்களைக் கைது செய்ய உதவியாக இருந்த பணியைப் பாராட்டி மாநகர காவல் ஆணையர் கபில்குமார் சரத்கர் சிங்கப்பெண் சிறப்புப் படையை நேரில் அழைத்து பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *