மாரணி வாரியேந்தல் பஞ்சாயத்து யூனியன் பள்ளியை சேர்ந்த ஆசிரியை ஒருவர் எம்எல்ஏ கார்த்திகேயனிடம், தங்களது பள்ளியில் மாணவிகளுக்கான கழிப்பறை இல்லை என்பதால் மாணவர்கள் கழிப்பறைக்கு சென்று விட்டு வரும் வரை காத்திருந்து பின்னர் மாணவிகளை அனுப்பக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஏற்கெனவே சீரமைப்பு பணிகள் என்ற பெயரில் மாணவிகளுக்கான கழிப்பறையை இடித்து விட்டார்கள். புதிய கழிப்பறைகள் கட்டிக் கொடுக்கவில்லை எனவும், தங்களது பள்ளியில் இருக்கக்கூடிய மேற்கூரைகள் சேதமடைந்து மழை காலத்தில் மழை நீர் கசிவு ஏற்படுவதாகவும் தெரிவித்தார்.
இதனைக் கேட்ட சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் ‘எதற்காக புதிய கழிவறைக்கான ஒப்பந்த பணி அளிப்பதற்கு முன்பாக இடித்தீர்கள்? உடனடியாக ஒரே நாளில் திங்கள்கிழமைக்குள் புதிய பணி ஒப்பந்தம் போடப்பட்டு கழிவறையை கட்டிகொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதோடு, `பள்ளியில் உள்ள மேற்கூரைகளை சரி செய்வதற்கு உடனடியாக திட்டப்பணிகளை உருவாக்கி பணிகளை முடித்து தர வேண்டும்’ எனத் தெரிவித்தார்.
அப்போது ஆசிரியையைப் பார்த்து பேசிய எம்.எல்.ஏ, `நீங்கள் உங்கள் வீட்டுக்காக கேட்கவில்லை. பள்ளிக்காக கேட்கிறீர்கள்… பாராட்டுகிறேன், நிச்சயமாக திங்கள்கிழமைக்குள் நான் கழிப்பறையை கட்டுவதற்கான ஆணையை பிறப்பிப்பேன்’ எனத் தெரிவித்தார்.