மெல்போர்ன் பல்கலைக்கழகத்துடன் கல்விசார் ஒப்பந்தம்
ஆஸ்திரேலிய பயணத்தின் மற்றொரு முக்கிய நிகழ்வாக, உலகின் முன்னணி உயர்கல்வி நிறுவனங்களில் ஒன்றான The University of Melbourne உடன் கல்வி குழுமத்தின் சார்பில் கல்விசார் ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஆசிரியர்களின் தொழில்முறை மேம்பாடு, சர்வதேச கல்வித் தரநிலைகள், புதுமையான கற்பித்தல் முறைகள் மற்றும் கல்வித் தர மேம்பாட்டிற்கான ஒத்துழைப்புகளை முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியப் பல்கலைக்கழகங்களின் கல்வி அனுபவங்களையும் சிறந்த கற்பித்தல் நடைமுறைகளையும் தமிழகப் பள்ளிகளுக்குக் கொண்டு வருவதற்கான முக்கிய முயற்சியாக இந்த ஒப்பந்தம் கருதப்படுகிறது.
மேற்கு ஆஸ்திரேலிய பல்கலைக்கழகத் துணைவேந்தர்களுடன் சந்திப்பு
பெர்த் நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற The University of Western Australia (UWA) பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் அமித் சக்மா (Prof. Amit Chakma) மற்றும் சர்வதேச உறவுகளுக்கான துணைத் துணைவேந்தர் பேராசிரியர் ஜெனிஃபர் ஹோவெல் (Prof. Jennifer Howell) ஆகியோரை கல்வி குழுமத்தின் தலைவர் முனைவர் செந்தில்குமார் மற்றும் தாளாளர் திரு. குமரேஷ் சந்தித்தனர்.
இச்சந்திப்பில் இந்திய மாணவர்களுக்கான சர்வதேச உயர்கல்வி வாய்ப்புகள், மாணவர் திறன் மேம்பாடு, உயர்கல்விக்கான தயார்நிலை மற்றும் எதிர்கால கல்விசார் ஒத்துழைப்புகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
தமிழக மாணவர்களுக்கு உலகளாவிய கல்வி வாய்ப்புகள்
இந்த சர்வதேச கல்வி முயற்சிகள் மூலம் மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பயிலும் மாணவர்களுக்கும் உலகளாவிய கல்வி வாய்ப்புகளை உருவாக்க கல்வி குழுமம் திட்டமிட்டுள்ளது.
சர்வதேச பாடத்திட்டங்கள், திறன் சார்ந்த கற்றல், ஆசிரியர் மேம்பாடு மற்றும் உலகளாவிய உயர்கல்விக்கான தயார்நிலை ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளது.
கிராமப்புற மாணவர்களுக்கும் உலகத்தரமான கல்வி – கல்வி குழுமத் தலைவர்
இதுகுறித்து கல்வி குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் முனைவர் எஸ். செந்தில்குமார் கூறியதாவது:
“நான் ஒரு தமிழ்வழி அரசுப் பள்ளியில் கல்வி பயின்றவன். கிராமப்புற மாணவர்களின் திறமைகளையும், அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய கல்வி வாய்ப்புகளின் முக்கியத்துவத்தையும் நன்கு அறிந்தவன்.
உலகத்தரமான கல்வி என்பது பெருநகரங்களிலும் வெளிநாடுகளிலும் பயிலும் மாணவர்களுக்கு மட்டுமே கிடைக்க வேண்டிய ஒன்றல்ல. தமிழகத்தின் கிராமப்புற மாணவர்களுக்கும் அதே தரத்திலான கல்வி வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்பதே எங்களது நோக்கம்.
மேற்கு ஆஸ்திரேலிய WACE கல்வித் திட்டத்திற்கான ஒப்பந்தமும், மெல்போர்ன் பல்கலைக்கழகத்துடனான கல்விசார் ஒப்பந்தமும் இந்த இலக்கை நோக்கிய முக்கியமான முன்னேற்றங்களாகும்.
உலகத்தரமான கல்வியைத் தேடி நமது மாணவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டும் என்ற நிலையை மாற்றி, உலகத்தரமான கல்வி வாய்ப்புகளை நமது மாணவர்களிடம் கொண்டு வருவதே எங்களது இலக்கு.
மதுரை போன்ற நகரங்களிலும் கிராமப்புறங்களிலும் கல்வி பயிலும் மாணவர்களும் உலக அரங்கில் சாதனையாளர்களாக உருவாக வேண்டும் என்பதே எங்களது கனவு” என்றார்.
தமிழகப் பள்ளிக் கல்வியை சர்வதேச கல்வி அமைப்புகளுடன் இணைக்கும் கல்வி குழுமத்தின் இந்த முயற்சிகள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குப் புதிய கல்வி வாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.