மதுரை கூடலழகர் கோயில் : நினைத்த காரியத்தை முடிக்க அருளும் வியூக சுந்தரராஜ பெருமாள்! | madurai koodal alagar kovil

Spread the love

மதுரை என்றதும் பலருக்கும் நினைவுக்கு வருவது மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயிலும் அழகர்கோயிலும்தான். ஆனால் மதுரையின் நடுவே சிங்காரமாக அமர்ந்திருக்கும் ஓர் ஆலயம். அழகர்மலையில் இருப்பவர் கள்ளழகர் என்றால் இவர் கூடல் அழகர். மதுரைக்கே அடையாளமான அழகர். மதுரைக்கு கூடல் மாநகர் என்கிற பெயர் உண்டு. அப்படிப்பட்ட கூடல்மாநகரில் கோயில் கொண்டிருக்கிறார் இந்த கூடலழகர். வாருங்கள் அந்தக் கோயில் குறித்த சில அற்புதங்களை தரிசிப்போம்.

ஒருமுறை மதுரையை வெள்ளம் சூழ்ந்தது. பெருமாள் அந்த நகரைக் காக்கத் திருவுளம் கொண்டு சில மேகங்களை ஏவ அவையே நான்கு மாடங்களாக மாறி மதுரையைக் காத்தது. இதனால் நான்மாடக் கூடல் என்றும் கூடல் நகர் என்றும் இந்த ஊருக்குப் பெயர் உண்டானது. மேகங்களை ஏவிய பெருமாள் கூடலழகர் என்றானார்.

மதுரை கூடலழகர்

மதுரை கூடலழகர்

பிரம்மனின் மகன் சனத்குமாரர், திருமாலை அர்ச்சாவதார அதாவது சிலை வடிவில் தரிசிக்க வேண்டும் என விருப்பம் கொண்டார். அவர் மண்ணுலகம் வந்து கிருதமால் நதிக்கரையில் பெருமாளை நோக்கி தவமிருந்தார். அப்போது ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள் அவருக்குக் காட்சி அளித்தார். உடனே சிற்பி விஸ்வகர்மாவை வரவழைத்து, பெருமாள் அளித்த திருக்காட்சியை அப்படியே வடிவமைத்து, அதை அஷ்டாங்க விமானத்தின் கீழ் வைத்து பிரதிஷ்டை செய்தார் என்றும் தலவரலாறு கூறுகிறது. ஐந்து நிலை ராஜகோபுரம், எட்டுப் பிராகாரங்கள், அநேக சந்நிதிகள், மூன்று தளங்கள், ஐந்து சிகரங்கள், அமர்ந்த, நின்ற, சயனித்த கோலத்தில் மூன்று பெருமாள்கள் என அமைந்த பிரமாண்ட ஆலயம் இது.

இருந்தையூர் செல்வன், பல்லாண்டு நாயகர் என்றும் திருநாமங்கள் கூடலழகருக்கு உண்டு. பெரியாழ்வார் இவரைப் “பல்லாண்டு வாழ்க’ என்று வாழ்த்திப் பாடினார். பாண்டிய மன்னன் வல்லப தேவனின் சந்தேகத்தை நீக்கி ‘திருமாலே பரம்பொருள்’ என்று மெய்ப்பித்து பெரியாழ்வார் பரதத்துவ நிர்ணயம் செய்த இடம் மெய்காட்டும் பொட்டல் என்றானது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *