மதுரை தெற்கு தொகுதியில் திமுக கூட்டணிக் கட்சியான மதிமுக சார்பில் பூமிநாதன், பாஜக சார்பில் ராம ஸ்ரீநிவாசன், தவெக சார்பில் கோபிசன் ஆகியோர் போட்டியிட்டனர். தொகுதியில் செளராஷ்டிரா சமூக மக்களின் வாக்குகள் அதிகம் இருப்பதோடு, கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது மதுரை தெற்கு தொகுதியில் அதிக வாக்குகள் பாஜக-விற்கு விழுந்தது என்பதால், அதிமுக-விடம் இந்த தொகுதியைக் கேட்டு வாங்கிப் போட்டியிட்டது பாஜக.
இதில் செளராஷ்டிரா சமூகத்தைச் சேர்ந்த மகாலட்சுமி என்பவர் சீட் எதிர்பார்த்த நிலையில், பாஜக-வின் மாநிலச் செயலாளர் ராம ஸ்ரீநிவாசனுக்கு சீட் ஒதுக்கப்பட்டது. இதனால் செள்ராஷ்டிரா சமூக மக்கள் அதிருப்தியடைந்ததாகக் கூறப்படுகிறது. அதே சமயத்தில் மதுரை தெற்கு தொகுதியில் தவெக சார்பில் ஃபைனான்சியர் அன்பு செழியனின் மகன்தான் போட்டியிடுவதாக இருந்தது. ஆனால் திமுக-வின் தலையீட்டினால் அவர் விலகிப் போகவே, அவசர கதியில் ஜோ.பீட்டர் என்பவருக்கு சீட் வழங்கப்பட்டது.

திடீரென வேட்பாளராக அறிவிக்கபட்ட ஜோ.பீட்டரின் செயல்பாடுகள் சரியில்லை என நினைத்த தவெக தலைமை, வேட்பு மனுதாக்கலின் கடைசி நாளின் போது செளராஷ்டிரா சமூகத்தைச் சேர்ந்த கோபிசன் என்பவரை வேட்பாளராக அறிவித்தது.
மதுரை தெற்கு தொகுதியில் செள்ராஷ்டிரா சமூகத்திற்கு அடுத்தபடியாக முக்குலத்தோர் வாக்குகள் கணிசமான அளவில் உள்ளது. இந்தச் சமூக மக்கள் பெரும்பாலும் பூமிநாதனுக்கே வாக்களித்து வந்த நிலையில், இந்த முறை தவெக-விற்கு வாக்களித்திருப்பதாக கூறப்படுகிறது.

கோபிசன் தொகுதிக்கு அறிமுகம் இல்லை என்றாலும் அவர் சார்ந்திருக்கும் சமூக வாக்குகள், தவெக-வின் தாக்கம் போன்றவற்றால் 62,617 வாக்குகள் பெற்று மதிமுக, பாஜக வேட்பாளர்களைத் தோற்கடித்து வெற்றி பெற்றிருக்கிறார், தவெக வேட்பாளர் கோபிசன். வாக்கு எண்ணிக்கையின் போது ஆரம்பத்தில் இருந்தே தவெக வேட்பாளர் கோபிசன் முன்னிலை பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.