மதுரை பைபாஸ் சாலையில் உள்ள தனிஷ்க் ஜுவல்லர்ஸ் நகைக்கடையில் கடந்த 12 ஆம் தேதி அதிகாலையில் 11 கிலோ எடையுள்ள பல கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான நிஷாந்த் நேற்று தர்மபுரி மாவட்டம் சேசம்பட்டி பகுதியில் அதியமான்கோட்டை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து மதுரை தனிப்படை காவல்துறையினர் அதியமான்கோட்டை காவல்நிலையத்தில் இருந்து நிஷாந்தை மதுரை எஸ்.எஸ்.காலனி காவல்நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அங்கு நிஷாந்திடம் துணை ஆணையர் இனிகோ திவ்யன் தலைமையில் விசாரணை நடைபெற்றது.
நகைகள் கொள்ளை சம்பவம் நடைபெற்றது குறித்தும் நகைகளைப் பதுக்கி வைத்த இடங்கள் குறித்தும் விசாரணை நடத்திய நிலையில் மதுரை முனியாண்டிபுரம் கோபாலிபுரம் மலைப்பகுதியில் பதுக்கி வைத்திருந்த 6 கிலோ 400 கிராம் நகை மூடையினை காவல்துறையினர் மீட்டனர்.
ஏற்கனவே இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நிஷாந்தின் தோழி மீனாட்சியிடம் இருந்து 5 கிலோ 500 கிராம் நகைகள் மீட்கப்பட்ட நிலையில் இதுவரை 11 கிலோ 900 கிராம் நகைகள் மொத்தமாக முழுமையாக மீட்கப்பட்டதாக காவல்துறை தரப்பில் தகவல் கூறப்படுகிறது.

தொடர்ந்து காவல்துறையினர் நிஷாந்திடம் கொள்ளை சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய பின்னர் இன்று அதிகாலை காவல் நிலையத்திலிருந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது.
பின்னர் பெரியார் பேருந்து நிலையம் அருகே காவல்துறை கட்டுப்பாட்டு அறை வளாகத்தில் உள்ள அளவீடு பதிவு செய்யும் யூனிட்டில் (MCU) நிஷாந்திற்குச் சோதனை நடத்தப்பட்டு கை ரேகைகள், கருவிழி, உடல்தோற்றம் முழுவதும் பதிவு செய்யப்பட்ட பின்னர் மதுரை மாவட்ட ஐந்தாவது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி லட்சுமி பிரியா முன்பு ஆஜர் படுத்தப்பட்டார்.
அப்போது பறிமுதல் செய்யப்பட்ட நகைகளை நீதிபதி முன்பாகக் காண்பித்தனர். பின்னர் குற்றவாளி நிஷாந்தை டிசம்பர் 1ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிபதி லட்சுமி பிரியா உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து பலத்த பாதுகாப்புடன் மதுரை மத்தியச் சிறைக்கு நிஷாந்த் அழைத்துச் செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்