மதுரை பழங்காநத்தம் பைபாஸ் நேரு நகர் நேதாஜி மெயின் ரோடு பகுதியில் தனிஷ் நகைக் கடை கடந்த மாதம் 14 ஆம் தேதி திறக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று காலை நகைக் கடையைத் திறந்து பார்த்தபோது விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த நகைகள் காணாமல் போனது தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் உடனடியாக எஸ்.எஸ். காலனி காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் நகைக் கடைக்குள் சென்று சோதனை செய்தபோது விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பல கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.
அப்போது அங்குள்ள சிசிடிவி கேமரா காட்சிப் பதிவுகளை ஆய்வு செய்தபோது அதில் தனி ஒரு நபராக இளைஞர் ஒருவர் உடல் முழுவதிலும் கருப்பு துணி முகமுடி அணிந்தவாறு லிப்ட் பணிகள் நடைபெற்றபடி இருந்த கதவை கைகளால் திறந்து லிப்ட் பணிக்காகப் போடப்பட்ட கயிறு வழியாக தரைத்தளத்திற்குள் உள்ள கடைக்குள் இறங்கிசென்று ஆங்கிலப் படத்தில் வரும் கொள்ளையனைப் போல ஒவ்வொரு நகைகளாகப் பதற்றமின்றி சாக்கு மூட்டை ஒன்றில் எடுத்து வைத்து திருடிய காட்சிகள் பதிவாகியுள்ளது.
இதையடுத்து கொள்ளையனின் முகம் பதிவாகாத நிலையில் உடல் அமைப்பு மற்றும் முக அமைப்பை அடிப்படையாகக் கொண்டு விசாரணை நடத்திவருகின்றனர்.

மதுரை மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கொள்ளை சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தினர். மேலும் தற்போது மாநகர காவல்துறை துணை ஆணையர் இனிகோ திவ்யன் தலைமையில் 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொள்ளை சம்பவம் குறித்து சிசிடிவி கேமிராக்களைக் கைப்பற்றி தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.
3 தளங்களாக உள்ள நகைக்கடை அமைந்த கட்டிடத்தில் கீழ் தளத்தில் நகை விற்பனை நடைபெற்று வந்துள்ளது. இரண்டாவது தளத்தில் காலியாகவுள்ள நிலையில் மூன்றாவது மாடியில் நகைகளைப் பாதுகாப்பதற்கான லாக்கர் அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருகிறது.