அதிர்ச்சியளிக்கும் தீர்ப்பு
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சர் பேட்ரிக் டெவ்லின், மருத்துவ உலகிற்கும் சட்ட உலகிற்கும் ஒரு புதிய கோட்பாட்டை அறிமுகப்படுத்தினார். அதுதான் இரட்டை விளைவு கோட்பாடு (Doctrine of Double Effect).
அதாவது, “தீராத வலியால் துடிக்கும் ஒரு நோயாளியின் வலியைக் குறைப்பதற்காக மருத்துவர் கொடுக்கும் மருந்து, தற்செயலாக அந்த நோயாளியின் ஆயுளைக் குறைத்து மரணத்திற்கு வழிவகுத்தால், அது கொலையாகக் கருதப்படாது. ஏனெனில் மருத்துவரின் நோக்கம் வலியைக் குறைப்பதே தவிர, கொலை செய்வதல்ல” என்பதே அந்தக் கோட்பாடு.
இந்தத் தீர்ப்பின் அடிப்படையில், 1957 ஏப்ரல் 9-ம் தேதி, ஜூரிகள் வெறும் 44 நிமிட ஆலோசனைக்குப் பிறகு டாக்டர் ஆடம்ஸை `குற்றமற்றவர்’ என அறிவித்தனர். மற்றொரு கொலை வழக்கான கெர்ட்ரூட் ஹல்லெட் வழக்கையும் அரசுத் தரப்பு வாபஸ் பெற்றது.

தீர்ப்புக்குப் பிந்தைய வாழ்க்கை
கொலை வழக்கிலிருந்து தப்பினாலும், போதை மருந்துகளைத் தவறாகக் கையாண்டது, போலி சான்றிதழ்கள் வழங்கியது போன்ற குற்றங்களுக்காக ஆடம்ஸின் மருத்துவ உரிமம் ரத்து செய்யப்பட்டது; அபராதமும் விதிக்கப்பட்டது. ஆனால், 1961-ம் ஆண்டு மீண்டும் மருத்துவ உரிமத்தைப் பெற்று ஈஸ்ட்போர்னிலேயே தன் தொழிலைத் தொடர்ந்தார்.
1983-ம் ஆண்டு, தன் 84-வது வயதில் இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டு, நிமோனியா காய்ச்சலால் ஆடம்ஸ் மரணமடைந்தார். அவர் இறக்கும்போது அவரிடம் சுமார் 4,00,000 பவுண்டுகள் (இன்றைய மதிப்பில் பல கோடி ரூபாய்) சொத்து இருந்தது.
டாக்டர் ஜான் போட்கின் ஆடம்ஸ் வழக்கு, குற்றவியல் வரலாற்றில் ஒரு புதிராகவே இன்றும் பார்க்கப்படுகிறது. சட்டத்தின் பார்வையில் அவர் குற்றமற்றவர் என விடுவிக்கப்பட்டாலும், பின்னாளில் வரலாற்றாசிரியர்களும் மருத்துவ நிபுணர்களும் ஆய்வு செய்தபோது, ஆடம்ஸ் ஒரு தொடர் கொலையாளியாகவே இருந்திருக்க அதிக வாய்ப்புள்ளது என்று கருதினர்.
நோயாளிகளின் நம்பிக்கையைப் பணமாக்கி, பிறகு அவர்களைப் பிணமாக்கிய அந்த மருத்துவரின் கதை, பிரிட்டன் மருத்துவத் துறையில் கடுமையான சட்டத் திருத்தங்கள் கொண்டு வரவும், மரணச் சான்றிதழ் வழங்கும் நடைமுறைகள் மாற்றப்படவும் முக்கியக் காரணமாக அமைந்தது.