மதுரையில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கோயில் பூசாரி காவலர்கள் தாக்கியதில் உயிரிழந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
இது தொடர்பாக பா.ம.க தலைவர் அன்புமணி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “மதுரை சிந்தாமணி காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட மதுரை மேல அனுப்பானடியைச் சேர்ந்த கோயில் பூசாரி பரமசிவம் என்பவரை, காவல்நிலையத்தில் வைத்து கொடூரமாகத் தாக்கியதில் அவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் தீவிர மருத்துவம் அளிக்கப்பட்டும் பயனின்றி உயிரிழந்தார் என்று வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.

பூசாரி பரமசிவம் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். காவல்துறையினர் தாக்கியதில் உயிரிழந்த பரமசிவம் எந்தத் தவறும் செய்யவில்லை. அண்டை வீட்டாருடன் வாகனம் நிறுத்துவதில் ஏற்பட்ட மோதல் தொடர்பான விசாரணைக்காக கடந்த மாதம் 19-ம் தேதி அழைத்துச் சென்ற சிந்தாமணி காவல் நிலைய காவலர்கள், அவரைக் கொடூரமாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
அதைத் தொடர்ந்து வாந்தி, மயக்கம், தலைவலி ஏற்பட்டு அவதிப்பட்ட பரமசிவம் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டும் பயனின்றி உயிரிழந்திருக்கிறார்.