ஜார்கண்ட் மாநிலம், பலாமு மாவட்டம், போல்பெல் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார் சிங். இவர், தூத்துக்குடி சில்லாநத்தம் பகுதியில் இயங்கி வரும் தனியார் கார் தொழிற்சாலையில் ஒப்பந்த ஊழியராகப் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு திரு.வி.க நகரில் உள்ள டாஸ்மாக் மதுபானக்கடைக்குச் சென்றுள்ளார். பிறகு அவர் தங்கியிருந்த வீட்டிற்கு திரும்பவில்லை.

இந்த நிலையில் இன்று காலையில் அவர் டாஸ்மாக் கடை அருகிலுள்ள காட்டுப்பகுதியில் தலையில் அடிபட்ட நிலையில் இறந்து கிடப்பதாக தென்பாகம் காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அங்குள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ராஜேஷ்குமாரை அடித்துக் கொன்ற சிவா, ஜேம்ஸ், பூமிநாதன் மற்றும் இமாம் கசாலி ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், “இரவில் நாங்கள் 4 பேரும் திரு.வி.க நகர் டாஸ்மாக் கடை அருகிலுள்ள காட்டுப்பகுதியில் மது அருந்திக் கொண்டிருந்தோம். எங்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டதால், அப்போது ஏற்கெனவே தனியாக அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்த ராஜேஷ்குமாரிடம் தண்ணீர் பாட்டில் கேட்டோம். ஆனால் அவர் தண்ணீர் பாட்டில் தர மறுத்ததுடன் இந்தியில் எங்களை திட்டினார்.

இதனால் அவருக்கும் எங்களுக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. அங்கு கிடந்த மரக்கட்டையால் அவரது தலையில் ஓங்கி அடித்தோம். அவர் உயிரிழந்துவிட்டார். உடனே அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டோம்” என்றனர். இதுகுறித்து போலீஸாரிடம் பேசினோம், “இந்த கொலையில் கைதான சிவா, பூ கட்டும் தொழிலாளி. இவர் மீது இரண்டு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இமாம் கசாலி தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்துள்ளார்.
ஜேம்ஸ், பூமிநாதன் ஆகியோர் சுமை தூக்கும் தொழிலாளி. இவர்கள் 4 பேரும் பூ மார்க்கெட் பகுதியில் இயங்கி வந்த டாஸ்மாக் பாரில் மது அருந்தும் போது அடிக்கடி சந்தித்துக் கொண்டதால் நண்பர்களாகியுள்ளனர். அதன் பின்னர் இரவு 10 மணிக்கு மேல் காட்டுப்பகுதியில் அமர்ந்து நள்ளிரவு வரை மது அருந்திவிட்டு வீட்டிற்குச் செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர்” என்றனர். தூத்துக்குடியில் ஜார்கண்ட், பீகார், ஒடிசா உள்ளிட்ட பல்வேறு மாநிலத் தொழிலாளர்கள் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்கள் பெரும்பாலும் இரவு 10 மணிக்கு மேல் மது அருந்துவதை வழக்கமாக வைத்துள்ளனர். இதனால், கடைகள் அடைக்கப்பட்ட பிறகும் கூடுதல் விலைக்கு மதுபாட்டில்களை வாங்கிச் சென்று மது அருந்துகின்றனர். அத்துடன், தூத்துக்குடியில் பல டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட பிறகு விடிய விடிய சட்டவிரோதமாக மது விற்பனை நடந்து வருகிறது. போலீஸார் ரோந்துப் பணிகளை தீவிரப்படுத்தினால் சட்டவிரோத மது விற்பனையையும், அதனால் ஏற்படும் குற்றச் செயல்களையும் கட்டுப்படுத்தலாம் எனக் கூறப்படுகிறது.