மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் அருகில் நர்மதா ஆற்றில் சொகுசு படகில் சுற்றுலாப் பயணிகள் சுற்றிப்பார்க்கச் சென்றனர். படகு ஆற்றின் நடுவில் சென்று கொண்டிருந்தபோது திடீரென பலத்த புயல் காற்று வீசியது. இதனால் படகு மிகவும் ஆட்டம் காண ஆரம்பித்தது. படகு கடுமையான நிலை தடுமாறியதால் உள்ளே தண்ணீர் சென்றது.
பயணிகள் அதிர்ச்சியில் உதவி கேட்டு கத்த ஆரம்பித்தனர். சிறிது நேரத்தில் படகில் தண்ணீர் அதிகரித்து படகு கவிழ்ந்தது. படகில் இருந்த லைஃப் ஜாக்கெட் அணிந்து சிலர் தப்பிக்க முயன்றனர்.
அவர்களை உள்ளூர் மக்கள் கயிறு கட்டி வெளியில் கொண்டு வர முயன்றனர். ஆனால் அனைத்து பயணிகளுக்கும் லைஃப் ஜாக்கெட் கொடுக்கப்படவில்லை. படகில் மொத்தம் 30 பேர் இருந்தனர்.

விபத்து குறித்து கேள்விப்பட்டதும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். அதிகமானோர் தண்ணீரில் பல மணி நேரம் உயிருக்குப் போராடியபடி தத்தளித்துக்கொண்டிருந்தனர். அவர்களில் ஒன்பது பேர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.
டெல்லியில் இருந்து நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பம் சுற்றுலாவிற்கு வந்திருந்தனர். அவர்களில் தாய் மற்றும் நான்கு வயது மகன் ஆகியோருக்கு ஒரு லைஃப் ஜாக்கெட் மட்டும் கொடுக்கப்பட்டு இருந்தது. அவர்கள் ஒரே ஜாக்கெட்டை அணிந்து கொண்டு தண்ணீரில் உயிர் பிழைக்க முயன்றனர்.
ஆனால் துரதிஷ்டவசமாக இரண்டு பேரும் உயிரிழந்தனர். அப்பெண்ணின் கணவர் மற்றும் மகள் தண்ணீரில் நீந்தி கரைக்கு வந்தனர். 4 வயது சிறுவன் தனது தாயாரைக் கட்டிப்பிடித்தபடி உயிரிழந்து கிடந்தான்.
மீட்புப் பணிகளை மாநில அமைச்சர் ராகேஷ் சிங் நேரில் பார்வையிட்டார். உயிரிழந்தவர்களின் உறவினர்கள் கதறி அழுததைப் பார்த்த அமைச்சர் ராகேஷ் சிங் தனது கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியாமல் இருந்தார்.
இந்த விபத்தில் உயிர் தப்பிய உசேன் என்பவர் இது குறித்து கூறுகையில், “‘நான் அதிர்ஷ்டவமாகத்தான் உயிர் தப்பினேன். உயிர் பிழைக்கப் போராடியபோது என் தலை மட்டும் தண்ணீருக்கு மேல் இருந்ததால் என்னால் சுவாசிக்க முடிந்தது. ஆனால் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் நான் உயிருக்குப் போராடினேன்.
உடல்கள் என் கண் முன்பு என்னைக் கடந்து செல்வதை என்னால் காண முடிந்தது. அதிர்ஷ்டவசமாக, மீட்புக் குழுவினர் என்னைக் கண்டுபிடித்தார்கள், நான் காப்பாற்றப்பட்டேன்” என்றார். உயிரிழந்தவர்களில் 5 பேர் குழந்தைகள் ஆவர்.