மும்பை கல்யான் பகுதியைச் சேர்ந்த கோமல் கெய்க்வாட் என்ற 25 வயது பெண் தனது 3 வயது கைக்குழந்தையை கையில் வைத்துக்கொண்டு ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்திக்கொண்டிருக்கிறார். கோமல் கெய்க்வாடிற்கு 18 வயதில் திருமணமானது.
அவரது கணவர் ஆட்டோ ஓட்டிக்கொண்டிருந்தார். கடந்த 2023ம் ஆண்டு கோமலிற்கு பெண் குழந்தை பிறந்தது. ஆனால் குழந்தைக்கு ஒரு வயதாக இருந்தபோது தனது சொந்த ஊரான பர்பானிக்குச் சென்று வருவதாகக் கூறி விட்டு கோமல் கணவர் சென்றார்.

அதன் பிறகு அவர் வரவே இல்லை. குடும்பம் நடத்த, வீட்டு வாடகை கொடுக்க மற்றும் குழந்தையைக் கவனித்துக்கொள்ள என எதற்கும் பணம் இல்லை. சில நேரங்களில் சாப்பிடக்கூட பணம் இல்லாமல் இருந்தது. அந்த நேரத்தில் அவருக்கு ஆட்டோதான் கைகொடுத்துள்ளது. இப்போது கோமல் தனது 3 வயது குழந்தையை கையில் வைத்துக்கொண்டு ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்துகிறார்.
வீட்டில் குழந்தையைக் கவனித்துக்கொள்ள யாரும் இல்லாததால் இப்போது வீட்டை விட்டு வரும்போது தனது மகளையும் அழைத்து வந்துவிடுகிறார். மகளை முன் இருக்கையில் தன்னுடன் வைத்துக்கொள்கிறார்.
இது குறித்து அவரிடம் பேசியபோது, “‘எனது கணவர் எனக்கு ஆட்டோ ஓட்ட கற்றுக்கொடுத்து இருந்தார். இதன் மூலம் அவர் இல்லாத நேரத்தில் என்னால் ஆட்டோவில் மகளை பள்ளிக்கு அழைத்து செல்ல முடியும் என்று கூறினார். ஆனால் ஒரு நாள் இந்த ஆட்டோதான் எனக்கு சாப்பாடு போடப்போகிறது என்று அப்போது எனக்கு தெரியாது.