காங்கிரஸ் சார்பில் தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட மீனாட்சி நடராஜன் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால், ஹைதராபாத் நீதிமன்றத்தில் அவர் மீது நிலுவையில் உள்ள குற்ற வழக்கு பற்றி வேட்புமனுவில் குறிப்பிடப்படாததால் மீனாட்சி நடராஜனின் வேட்பு மனு நிராகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதனை கண்டித்து காங்கிரஸ் தலைமையகம் உள்ள அக்பர் சாலையில் போராட்டம் நடைபெற்றது. இதில், மத்தியப் பிரதேச காங்கிரஸ் தலைவர் ஜித்து பத்வாரி, மத்தியப் பிரதேச சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உமாங் சிங்கார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, தேர்தல் ஆணையத்துக்கு எதிராகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர்.
தொடர்ந்து குடியரசுத் தலைவர் மாளிகையை நோக்கி பேரணியாகச் செல்ல முயன்ற அவர்களை தடுப்புகள் கொண்டு போலீசார் தடுத்து நிறுத்தினர். தடுப்புகளை அகற்ற காங்கிரஸ் கட்சியினர் முயன்றதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.
முன்னதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் மற்றும் தேர்தல் ஆணையர்களை சந்தித்தனர். அப்போது, ‘மீனாட்சி நடராஜன் மீது நீதிமன்றம் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் அவரது மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. அவருடைய மனுவை ஏற்குமாறு தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிட வேண்டும்’ என கோரிக்கை மனு அளித்தது குறிப்பிடத்தக்கது.

