மனித சிறுநீரால் உருகும் எவரெஸ்ட் பனிப்பாறைகள்… வெளியான அதிர்ச்சி தகவல்..! – Kumudam

Spread the love

உலகின் மிக உயரமான சிகரமான எவரெஸ்ட் சிகரத்தை அடைய விரும்பும் மலையேற்ற வீரர்களின் முக்கிய தங்குமிடமாக இருப்பது Mount Everest Base Camp. மலையேற்ற சீசனில் இங்கு ஆயிரக்கணக்கான வீரர்கள், வழிகாட்டிகள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் உதவிப் பணியாளர்கள் திரள்வது வழக்கம். இந்நிலையில், இந்த அதிகரித்து வரும் மனித நடமாட்டம், எவரெஸ்ட் பகுதியில் உள்ள பனிப்பாறைகளுக்கும் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்துவதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

Regional Environmental Change இதழில் வெளியான ஆய்வில், எவரெஸ்ட் பேஸ் கேம்ப் பகுதியில் மனிதர்களின் செயல்பாடுகள் Khumbu Glacier எனப்படும் பனிப்பாறை உருகுவதற்கு பங்களிக்கக்கூடும் என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். உலகளாவிய காலநிலை மாற்றம், புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாடு மற்றும் மனித சிறுநீர் மூலம் உருவாகும் வெப்பம் ஆகிய மூன்று முக்கிய காரணிகளை ஆய்வு செய்துள்ளனர்.

ஆண்டுக்கு 0.28°C அதிகரிக்கும் வெப்பநிலை:

2023-ம் ஆண்டு வசந்த கால மலையேற்ற சீசனில் பேஸ் கேம்பில் ஆய்வாளர்கள் களத் தரவுகளைச் சேகரித்தனர். சமையல், வெப்பம் மற்றும் மின்சார உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் LPG, மண்ணெண்ணெய் மற்றும் பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்களால் வெளியாகும் வெப்ப ஆற்றலும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதனுடன், முகாமில் மனிதர்கள் சிறுநீர் கழிப்பதால் உருவாகும் வெப்பமும் ஆய்வில் கணக்கிடப்பட்டுள்ளது. 2023-ம் ஆண்டு சீசனில் இந்த நடவடிக்கைகள் மூலம் வெளியான மொத்த வெப்ப ஆற்றல் சுமார் 8.49 லட்சம் மெகாஜூல் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த அளவு வெப்பம் சுமார் 2,492 டன் பனிப்பாறை மற்றும் பனியை உருகச் செய்யும் திறன் கொண்டது என ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

இது பனிப்பாறை உருகுவதற்கு மனித சிறுநீர் மட்டுமே காரணம் என்பதல்ல. உலகளாவிய வெப்பநிலை உயர்வும் மிக முக்கியமான காரணியாக உள்ளது. இருப்பினும், பேஸ் கேம்ப் பகுதியில் நடைபெறும் உள்ளூர் மனித நடவடிக்கைகளும் ஏற்கனவே பாதிப்புக்குள்ளாகி வரும் பனிப்பாறையின் மீது கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்துவதாக ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.

எவரெஸ்ட் பேஸ் கேம்பில் வேகமாகும் வெப்பமயமாதல்:

1991 முதல் 2023 வரையிலான செயற்கைக்கோள் தரவுகளையும் ஆய்வாளர்கள் ஆய்வு செய்துள்ளனர். 32 ஆண்டுகளின் தரவுகளின்படி, எவரெஸ்ட் பேஸ் கேம்ப் பகுதியில் நிலத்தின் மேற்பரப்பு வெப்பநிலை ஆண்டுக்கு சராசரியாக 0.28°C அதிகரித்துள்ளது.

குறிப்பாக, பேஸ் கேம்ப் பகுதியில் பதிவான வெப்பநிலை உயர்வு, அதனை ஒட்டியுள்ள Khumbu Glacier-ன் மேற்பரப்பில் ஏற்பட்ட வெப்பநிலை உயர்வை விட சுமார் இரண்டு மடங்கு வேகமாக இருப்பதாக ஆய்வு தெரிவிக்கிறது.

தற்போதைய எவரெஸ்ட் பேஸ் கேம்ப் பனிப்பாறையின் மீதே அமைந்துள்ளதால், எதிர்காலத்தில் முகாமை பாதுகாப்பான, நிலையான தரைப்பகுதிக்கு மாற்ற வேண்டிய சூழல் ஏற்படலாம் என்றும் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதற்காக தற்போதைய முகாமுக்கு தென்மேற்கே இரண்டு மாற்று இடங்களையும் அவர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.

எவரெஸ்ட் பகுதியில் காலநிலை மாற்றத்தின் தாக்கம் ஏற்கனவே அதிகரித்து வரும் நிலையில், மலையேற்றம் மற்றும் சுற்றுலா காரணமாக அதிகரிக்கும் மனித நடவடிக்கைகளும் சுற்றுச்சூழலுக்கு புதிய சவாலாக மாறி வருவதாக இந்த ஆய்வு எச்சரிக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *