இத்தலம் இந்திரன் வழிபட்ட தலம். இந்திரனுக்கு மகேந்திரன் என்கிற பெயரும் உண்டு. மகேந்திரன் வழி பட்ட தலம் என்பதால் இதற்கு மகேந்திரபள்ளி என்கிற திருப்பெயர் உண்டானது.
ஒருமுறை முனிவரின் சாபத்தினால் இந்திரனுக்கு உடலெல்லாம் கண்ணானது. அந்தச் சாபம் தீர இந்திரன் இத்தலம் வந்து ஈசனை வழிபட்டான். அப்போது இங்கே தீர்த்தம் ஒன்றை உண்டாக்கி வணங்கினான்.
அதன் பலனாக அவனுக்கு அவன் சாப விமோசனம் தீர்ந்தது என்கிறது தலவரலாறு. இந்திரன் மட்டுமல்ல… சந்திரன், சூரியன், பிரம்மா ஆகியோரும் இத்தலம் வந்து வழிபட்டனர். எனவே இத்தலம் வந்து வேண்டிக்கொண்டால் முன்வினைகளால் ஏற்படும் தீய பலன்கள் தீரும். ஆனந்த வாழ்வு கிட்டும் என்கிறார்கள்.

பிராகாரத்தில் சண்டிகேஸ்வரர், மனைவியுடன் அருள்பாலிக்கிறார். விநாயகருக்கு தனிசந்நிதியில் அருள்கிறார். இவருக்கு இருபுறமும் ராகு, கேது இருவரும் உள்ளனர். எனவே இத்தல விநாயகரை வழிபட்டால் ராகு கேது தோஷங்கள் தீரும் என்பது நம்பிக்கை.
மேலும், விஸ்வநாதர், விசாலாட்சி, வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், மீனாட்சி சுந்தரேஸ்வரர், பைரவர், சனீஸ்வரர், சூரியன், சந்திரன் ஆகியோரும் சந்நிதி கொண்டு அருள்கின்றனர்.