மரடோனா முதல் மெஸ்ஸி வரை.. கால்பந்தில் தனி சாம்ராஜ்யம் நடத்தும் அர்ஜென்டினா.. இப்படிதான் நடக்குதா! | Lionel Messi: From Streets to Throne, How Argentina became more powerful team in the football history

Spread the love

Sports

oi-Yogeshwaran Moorthi

அர்ஜென்டினா: ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரில் அர்ஜென்டினா அணிக்கு இணையாக ஆதிக்கம் செலுத்த கூடிய அணி வேறு ஏதும் இல்லை என்ற சூழ்நிலை உருவாகி இருக்கிறது. உலகம் முழுவதும் அர்ஜென்டினா அணிக்கு ஆதரவாளர்கள் இருக்கிறார்கள். எவ்வளவு அதிகமாக ஆதரவாளர்கள் இருக்கிறார்களோ, அதே அளவிற்கு எதிர்ப்பாளர்களும் இருக்கிறார்கள். இருந்தாலும் அர்ஜென்டினா அணி ஆதிக்கத்தை மட்டும் கைகளில் இருந்து நழுவவிடவே இல்லை. இது எப்படி சாத்தியமானது என்பதை பார்க்கலாம்.

கால்பந்து விளையாட்டின் வரலாற்றை எழுத வேண்டுமென்றால், அர்ஜென்டினா அணியின் ஆதிக்கத்தை எழுதாமல் நிறைவு செய்ய முடியாது. ஏனென்றால் 3 ஃபிஃபா உலகக்கோப்பை, 16 கோபா அமெரிக்கா, 2 ஒலிம்பிக் பதக்கங்கள், 6 ஃபிஃபா யு20 உலகக்கோப்பையை அர்ஜென்டினா அணி வென்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் மரடோனா மற்றும் மெஸ்ஸி என்ற மகத்தான வீரர்களை கால்பந்துக்கு கொடுத்துள்ள நாடு அர்ஜென்டினா.

Lionel Messi

அர்ஜென்டினா கால்பந்து

19ஆம் நூற்றாண்டின் இறுதியில் தான் அர்ஜென்டினாவில் கால்பந்து விளையாட்டு ஊடுருவத் தொடங்கியது. அர்ஜென்டினாவில் இருந்த பிரிட்டிஷ் மக்கள் கால்பந்து விளையாட்டை அங்கிருந்த ரயில்வே தொழிலாளர்களுக்கு கற்றுக் கொடுத்தனர். அது கொஞ்சம் கொஞ்சமாக அர்ஜென்டினா முழுவதும் பரவத் தொடங்கியது. அப்படிதான் 1893ஆம் ஆண்டு அர்ஜென்டினா கால்பந்து கிளப் உருவாக்கப்பட்டது.

மெஸ்ஸி அணிந்திருக்கும் அர்ஜென்டினா ஜெர்சியில் AFC என்ற சின்னம் பொறிக்கப்பட்டிருக்கும். அதற்கு அர்ஜென்டினா கால்பந்து கிளப் என்பதே அர்த்தம். இது பிரிட்டிஷ் தீவுகளுக்கு வெளியே அமைக்கப்பட்ட உலகின் மிகப்பழமையான கால்பந்து கிளப்களில் ஒன்று. தொடர்ந்து 1931ல் அர்ஜென்டினா தனது உள்நாட்டு லீக்கை தொழில்முறை லீக்காக மாற்றிவிட்டது.

அர்ஜென்டினா லீக்

அதுதான் அர்ஜென்டினாவில் கால்பந்து வேகமாக வளர்ச்சி அடைய மிகப்பெரிய காரணமாக அமைந்தது. அதாவது ஐபிஎல் தொடரை போல் அர்ஜென்டினா, அந்நாட்டுக்கான லீக்கை 1931லேயே உருவாக்கிவிட்டது. இதன் மூலமாக திறமையான கால்பந்து வீரர்களுக்கு போதுமான பணம், இருப்பிடம் ஆகியவை கிடைக்க தொடங்கியது. இதனால் ஐரோப்பா சென்று கால்பந்து விளையாடும் வீரர்கள் அர்ஜென்டினாவுக்கு திரும்பினர்.

அதேபோல் அர்ஜென்டினா அணியின் ஆட்டம் என்பது ட்ரிபிள் செய்து எதிரணியை கடந்து செல்வது தான். அது அர்ஜென்டினா அணியின் குறுகிய தெருக்களில் இருந்து உருவான ஒன்றாகும். பொருளாதார வசதி இல்லாதவர்களுக்கு குறுகிய தெருக்கள் தான் மைதானம். அங்கு மக்கள் மீது கால்பந்து படக்கூடாது என்று ஒவ்வொரு சிறுவனும் எச்சரிக்கையுடன் ஆடுவான். அதுவே ஒரு கட்டத்தில் திறமையாக மாறிவிட்டது.

தெருக்களில் கொடுக்கும் பாடம்

இந்த தெருக்களில் இருந்து வந்தவர்கள்தான் மரடோனாவும், மெஸ்ஸியும். அர்ஜென்டினாவில் 5 வயதிலேயே சிறுவர்கள் கால்பந்தை தொடங்கிவிடுவார்கள். ஒவ்வொரு வீட்டிலும் கால்பந்து கட்டாயம் இருக்கும். கிட்டத்தட்ட கால்பந்து என்பது ஒரு கலாச்சாரமாக மாறிவிட்டது. இங்கு சிறுவர்களுக்கு பயிற்சியை தொடங்குவதற்கு முன், வெற்றிக்கான வெறியை விதைத்துவிடுகிறார்கள்.

ஒவ்வொரு சிறுவனும், மெஸ்ஸி எல்லாம் ஒரு வீரரா.. அவரை வீழ்த்துவேன் என்ற திமிருடன் தான் கால்பந்து விளையாட்டை விளையாடவே தொடங்குகிறான். சிறுவர்களை தயாரிப்பதற்காகவே அர்ஜென்டினா யூத் ஃபுட்பால் கட்டமைப்பு மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அப்படி சிறுவர்களாக இருந்து ஜாம்பவான்களாக உயர்ந்தவர்கள் தான் மரடோனா, மெஸ்ஸி, என்சோ ஃபெர்னான்டஸ், டி மரியா என்று அனைவரும்.

சிறுவர்களுக்கான கட்டமைப்பு

சிறுவர்கள் அனைவருக்கும் பாஸ், ட்ரிபிள், கண்ட்ரோல் ஆகிய மூன்று மட்டுமே கற்றுக் கொடுக்கப்படும். அங்கிருந்து சிறுவர்கள் அடுத்தக் கட்டம் செல்வதற்கு அவர்களின் புதுப் புது முயற்சிகளுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படும். நல்ல கற்பனை சிந்தனையும், அதனை செயல்படுத்தும் வலிமையான மனம் இருந்தால் மட்டுமே வலிமையான கால்பந்து வீரர்களாக மாற முடியும் என்று அர்ஜென்டினா முழுவதும் நம்பப்படுகிறது.

கிட்டத்தட்ட இந்தியாவில் கிரிக்கெட் ஊடுருவி இருப்பதை விடவும் இன்னும் அதிகமாகவே அர்ஜென்டினாவில் கால்பந்து ஊடுருவி இருக்கிறது என்றே சொல்லலாம். ஏனென்றால் லீக்குகள், கம்யூனிட்டி கிளப், பள்ளிகளுக்கான கிளப் என்று கால்பந்துக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் எதனுடனும் ஒப்பிட முடியாது. அதுவே அர்ஜென்டினா தனது கால்பந்து சாம்ராஜ்ஜியத்தை உருவாக்க அடிப்படை காரணமாக மாறியுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *