மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி காக்க்ரோச் ஜனதா கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 20 நாட்களாக உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்த சமூக செய்ற்பாட்டாளர் சோனம் வாங்சுக்கின் உடல்நிலை பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, டெல்லி போலீசார் அவரை வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
இந்த நிலையில், அவரின் உண்ணாவிரதம் மருத்துவமனையிலும் தொடர்வதாக அவரது மனைவி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய சோனம் வாங்சுக்கின் மனைவி கீதாஞ்சலி அங்மோ, உயர் நீதிமன்ற உத்தரவை காரணம் காட்டி சோனம் வாங்சுக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்ததாகவும், ஆனால் அவரை கட்டாயமாக மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிடவில்லை என்றும் தெரிவித்தார்.
மேலும், தற்போது சோனம் வாங்சுக்கிற்கு சிகிச்சை அளிக்கப்படாமல் மருத்துவ பரிசோதனைகள் மட்டுமே மேற்கொள்ளப்படுவதாகவும், அவரது மருத்துவ அறிக்கையை குடும்பத்தினரிடம் வழங்க மருத்துவமனை நிர்வாகம் மறுப்பதாகவும் கீதாஞ்சலி குற்றம்சாட்டினார்.
உடல்நிலை சோர்வடைந்திருந்தாலும் சோனம் வாங்சுக் மன உறுதியுடன் இருப்பதாக தெரிவித்த அவர், திட்டமிட்டபடி ஜூலை 20ஆம் தேதி நாடாளுமன்றம் நோக்கிய பேரணி நடைபெறும் என உறுதி அளித்தார். சோனம் வாங்சுக் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டால், தானே பேரணிக்கு தலைமை வகிப்பேன் என்றும் கூறினார் கீதாஞ்சலி.
இதற்கிடையே, CJP நிறுவனர் அபிஜித் தீப்கேவும் காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கியுள்ளார். சோனம் வாங்சுக்கை போராட்ட இடத்திலிருந்து அகற்றியிருப்பது தவறான நடவடிக்கை என விமர்சித்த அவர், போராட்டக்காரர்கள் மீண்டும் ஜந்தர் மந்தருக்கு திரும்ப வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.


