மருமகனுக்கு கல்தா கொடுத்த மாமியார்..?  லீமா ரோஸ் கொடுத்த ட்விஸ்ட்..!  எதிர்பார்க்காத எடப்பாடியார்..! – Kumudam

Spread the love

யார நம்புறதுனே தெரில தாஸ் அண்ணா என்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமே அல்லோல்பட்டு கொண்டிருக்கும் நிலையில், இதுவரை அக்கட்சியில் இருந்து 6 எம்.எல்.ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து, ஆளுங்கட்சியான தவெகவில் இணைந்துள்ளனர். 

இத்தகையச் சூழலில், அடுத்தது யார் என்ற மரண பீதியில் கட்சியின் நிரந்தரப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் மண்டையை பீய்த்துக் கொண்டிருக்க, நிச்சயம் லால்குடி எம்.எல்.ஏவான லீமா ரோஸ் தான் என்று ரத்தத்தின் ரத்தங்கள் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். அதற்கு காரணமும் இல்லாமல் இல்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவின் மாமியார் தான் இந்த லீமா ரோஸ். பிற அதிமுகவினரை எளிதில் வளைக்க முடிந்த தவெகவால், லீமா ரோஸையும் எமோஷனலாகவோ, அல்லது உறவு முறையாகவோ தவெகவில் இணைக்க முடியும் என்பதே ரத்த்த்தின் ரத்தங்களின் மைண்ட் வாய்ஸாக இருக்கிறது. 

அதுமட்டுமா? 2026 சட்டமன்றத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற லீமா ரோஸ், தேர்தலுக்குப் பிறகு எஸ்.பி. வேலுமணி ஆதரவு அணியில் தான் இடம்பெற்றிருந்தார். அதாவது, எடப்பாடியார் தலைமைக்கு எதிரான மனநிலையில் தான் இருந்தார். அதோடு, அதிமுகவில் நடந்த இந்த பிளவுக்கு லீமா ரோஸ் தான் காரணம் என்றும், மருமகன் ஆதவ் அர்ஜூனாவின் தூண்டுதலின் பேரில் தான் லீமா ரோஸ் எடப்பாடியை எதிர்த்தார் என்றும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது. ஆனால், லீமா ரோஸோ, கட்சியை பிளவுப்படுத்த நான் முயற்சி செய்தேன் என்று கூறுவது வதந்தி என்றும், கட்சியை இணைக்கும் முயற்சியிலேயே தான் ஈடுப்பட்டதாகவும் தெரிவித்தார். பிறகு கட்சி இணைந்து, தற்போது லீமா ரோஸ் அதிமுகவில் தான் இருக்கிறார். இருந்தாலும், லீமா ரோஸ் நிச்சயம் தவெகவிற்கு தாவுவது உறுதிதான் என்றும், அவரால் எடப்பாடியார் தலைமையை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றும் ர.ர.க்கள் இடையே பரவலாக பேசப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறது. 

இந்த நிலையில், அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணையும் பேச்சுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் லீமா ரோஸ். 

சென்னை ராயப்பேட்டையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற திருச்சி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் பேசிய எடப்பாடியார், கட்சியில் இருந்து விலகியவர்களை நினைத்து கவலைப்பட வேண்டாம் என்றும், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் முழு கவனம் செலுத்த வேண்டும் என்றும் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

எடப்பாடியாரை தொடர்ந்து பேசிய லீமா ரோஸ், “எனக்கு வாய்ப்பு கொடுத்து எம்எல்ஏ ஆக்கியது அதிமுக. எந்த சூழலிலும் கட்சியை விட்டு வெளியேற மாட்டேன். கட்சிக்கும், தலைமைக்கும் என்றும் விசுவாசமாக இருப்பேன்” என்று உறுதியளித்தார்.

இதனால், அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் தான் செல்ல இருப்பதாகக் கூறப்பட்ட வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் லீமா ரோஸ். இவரின் இந்த முடிவை கண்டு, “இப்பத்தான் எனக்கு உசுரே வந்த மாதிரி இருக்கு..” என்று எடப்பாடியார் பெருமூச்சிவிட்டு வருவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *