
“அம்மா சமீபகாலமாக நிறைய விஷயங்களை மறக்கிறார்கள்… இது டிமென்ஷியாவாக இருக்குமா?”
என்ற கேள்வியுடன் மருத்துவரை அணுகும் குடும்பங்கள் உண்டு. உண்மையில், மறதி என்பது ஓர் அறிகுறி; டிமென்ஷியா என்பது நினைவாற்றல் மட்டுமின்றி சிந்தனை, மொழித்திறன், முடிவெடுக்கும் திறன் உள்ளிட்ட மூளையின் செயல்பாடுகளை பாதிக்கக்கூடிய ஒரு மருத்துவ நிலை.
எல்லா மறதியும் டிமென்ஷியாவா?
இல்லை. தூக்கமின்மை, மனஅழுத்தம், மனச்சோர்வு, சில மருந்துகள், மதுப்பழக்கம் மற்றும் வைட்டமின் B12 குறைபாடு போன்ற பல காரணங்களாலும் நினைவாற்றல் பாதிக்கப்படலாம். எனவே, காரணத்தைக் கண்டறிவதே முதல் படி.
ஒருவருக்கு டிமென்ஷியா இருக்கலாம் என்று குடும்பத்தினர் எப்போது சந்தேகிக்க வேண்டும்?
ஒருவர் முன்பு எளிதாகச் செய்த வேலைகளைச் செய்ய முடியாமல் தடுமாறுவது முக்கியமான மாற்றம். பணத்தைக் கையாளுவதில் குழப்பம், உரையாடும்போது சரியான வார்த்தையைக் கண்டுபிடிக்க தொடர்ந்து சிரமப்படுதல், திட்டமிடுதல் மற்றும் முடிவெடுத்தலில் மாற்றம் போன்றவற்றையும் கவனிக்க வேண்டும்.
டிமென்ஷியா என்றால் நினைவாற்றல் மட்டும் பாதிக்கப்படுமா?
இல்லை. சிலரிடம் ஆரம்பத்தில் நினைவிழப்பைவிட பேச்சு, நடத்தை, ஆளுமை அல்லது முடிவெடுக்கும் திறனில் மாற்றங்கள் முதலில் தெரியலாம். குறிப்பாக சில young-onset dementia-இத்தகைய அறிகுறிகள் காணப்படலாம்.
மறதிக்கு பரிசோதனை இருக்கிறதா?
ஒரே ஒரு பரிசோதனையால் காரணத்தை முடிவு செய்துவிட முடியாது. மருத்துவர் அறிகுறிகள், மருத்துவ வரலாறு, பயன்படுத்தும் மருந்துகள் ஆகியவற்றை மதிப்பிட்டு, தேவைக்கேற்ப நினைவாற்றல் மற்றும் அறிவாற்றல் மதிப்பீடு, ரத்தப் பரிசோதனைகள் அல்லது மூளை ஸ்கேன் போன்றவற்றை பரிந்துரைக்கலாம்.
குடும்பத்தினர் என்ன செய்ய வேண்டும்?
“வயதாகிவிட்டது… அதனால் மறக்கிறார்” என்று ஒதுக்கிவிடுவதும் தவறு; ஒவ்வொரு மறதியையும் டிமென்ஷியா என்று நினைத்துப் பயப்படுவதும் தேவையில்லை. மாற்றம் தொடர்கிறதா, அதிகரிக்கிறதா, அவரது இயல்பான வாழ்க்கையைப் பாதிக்கிறதா என்பதுதான் முக்கியம்.
மறதியை மறைப்பதைவிட, அதன் காரணத்தைத் தெரிந்துகொள்வதே மனநிம்மதிக்கான முதல் படி.
Dr. Srikanth Srinivasan
(Senior Consultant – Neurology, Specialist in Neuro Psychiatry, Apollo Hospitals, Greams Road, Chennai.)
For more details: 044 4040 1066
Email: [email protected]