பெரம்பலூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகை தந்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர்களை சந்தித்தார்.
இதில் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்த அமைச்சர் ராஜ்மோகன், பெரம்பலூர் மாவட்டத்தின் ஆய்வு பணியை தொடங்கியுள்ளதாகவும், சொந்த ஊரில் பொறுப்புள்ள அமைச்சராக செயல்பட உள்ளதாகாவும் பெருமிதம் தெரிவித்தார்.
தொடர்ந்து, “தனியாருக்கு நிகராக அரசு பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. தனியார் பள்ளி மாணவர்கள் அரசுபள்ளி ஆகிய இரண்டுமே இருகண்களைபோல் அரசு பார்க்கும் தனியாரைபோல அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்துவோம்” என தெரிவித்த அமைச்சர், “பள்ளிக்கல்விதுறையில் உள்ள லீகேஜ் எனப்படும் ஊழலை தடுத்து தேவையற்ற செலவினங்களை குறைத்து வருவாயை பெருக்க செய்தாலே பள்ளிகளை தரமாக மேம்படுத்தலாம்” என்று கூறினார்.
மேலும், மாணவர்களின் உயர்கல்வியில் புதிய பாடத்திட்டங்களை கொண்டுவரும் திட்டம் உள்ளதாகவும் அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து சட்டமன்றத்தில் நிகழ்ந்த தனிமனித தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள கருத்துகள் தொடர்பாக பேசிய அவர், ”சட்டமன்றத்தை சத்தமன்றமாக மாற்றியது எதிர்கட்சிகளே, மக்களுக்கான ஆக்கப்பூர்வ கருத்துகளை பேசாமல் தனிமனித தாக்குதலை எதிர்கட்சியினரே முன்வைத்து வருகின்றனர்” என்று குற்றம்சாட்டினார்.
தவெகவினர் அரசு பள்ளிகளில் இடையூறு செய்யும் நிகழ்வுகள் அதிகரித்துள்ளது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், “பள்ளிக்கூடத்தில் மாணவர்களை தொந்தரவு செய்யும் நிர்வாகிகளை நிரந்தமாக கட்சியை விட்டு நீக்குவோம். இனியும் தொடர்ந்தால் எந்த சமரசமும் இன்றி இதே நடவடிக்கை தொடரும்” என்று எச்சரிக்கைவிடுத்தார்.



