ரத்தத்தில் இருக்கும் மாஸ்ட் செல் (Mast cells) எனப்படும் வெள்ளை அணுக்கள், ஹிஸ்டமின் (Histamine), லூக்கோட்ரியன்ஸ் (Leukotrienes) போன்ற அழற்சி ஊக்கிகளை வெளிப்படுத்துவதால் சருமத்தில் அரிப்பு மற்றும் தடிப்பு ஏற்படுகிறது. இதுதான் படை நோய்க்கான காரணம். மாஸ்ட் செல்கள் தூண்டப்பட்டு ஹிஸ்டமின் வெளியேற நிறைய பேருக்கு காரணமே இருக்காது, அல்லது நமக்குத் தெரியாது.
முட்டை, பருப்பு வகைகள், கடல்வாழ் உயிரினங்கள் போன்ற சில உணவுகள், வைரஸ் உள்ளிட்ட கிருமித் தொற்றுகள், பூச்சிக்கடிகள், பெனிசிலின் (Penicillin), ஐபுரூஃபன் (Ibuprofen) போன்ற மாத்திரைகள், பிபி (BP) குறைக்க பயன்படுத்தப்படும் சில மாத்திரைகள் கூட அர்டிகேரியாவைத் தூண்டலாம்.
லேட்டக்ஸ் (Latex) போன்ற கையுறை பயன்பாடு, மன அழுத்தம், வெப்பம், தைராய்டு போன்ற ஆட்டோ இம்யூன் (Autoimmune) பாதிப்புகளாலும் அர்டிகேரியா தூண்டப்படலாம்.

பிபி (BP) குறைக்க பயன்படுத்தப்படும் சில மாத்திரைகள் கூட அர்டிகேரியாவைத் தூண்டலாம்.
படை நோய் பாதித்தால், முதல் நான்கு முதல் ஆறு வாரங்களுக்கு எந்தப் பரிசோதனைகளும் தேவையில்லை. வெறும் ஆன்டிஹிஸ்டமின் (Antihistamines) மாத்திரைகள் மட்டும் போதுமானவை. ஆறு வாரங்களுக்கு மேல் அரிப்பு நோய் வந்து வந்து போனால், அடிப்படை ரத்தப் பரிசோதனைகள் (Basic blood tests) தேவைப்படலாம். அவற்றை சரும மருத்துவரை அணுகி செய்து கொள்வது நல்லது. சிலருக்கு அலர்ஜி சோதனைகள் அல்லது பயாப்சி (Biopsy) போன்றவை தேவைப்படலாம்.
படை நோய்க்கான காரணிகள் (Triggers) நமக்குத் தெரிந்தால் அவற்றைத் தவிர்க்க வேண்டும். அதாவது ஒவ்வாத உணவுகள், ஆன்டிபயாடிக்ஸ் மாத்திரைகள் போன்றவை தவிர்க்கப்பட வேண்டும். நிறைய பேருக்கு என்ன காரணம் என்றே தெரிவதில்லை.
அவர்களுக்கு ஆன்டிஹிஸ்டமின் மாத்திரைகள் கொடுக்க வேண்டும். அடுத்தகட்ட சிகிச்சைகளும் உள்ளன. எனவே, நீங்கள் அனுபவம் உள்ள சருமநல மருத்துவரை அணுகி, ஆலோசனை பெறுங்கள்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.